Shocking confession from husband - incident in thiruvallur Photograph: (thiruvallur)
மனைவியை அடித்துக் கொன்று யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு, அவருடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளதாக அக்கம்பக்கத்தில் இரண்டு மாதங்களாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ளது தூராபள்ளம். இந்த பகுதியில் வசித்து வருபவர்கள் சிலம்பரசன்-பிரியா தம்பதி. சிலம்பரசன் வீட்டுக்கு வெள்ளை அடிப்பது உள்ளிட்ட கூலித் தொழில்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சிலம்பரசனுக்கு மனைவி பிரியா மீது முறையற்ற தொடர்பு உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாவை காணவில்லை. அக்கம்பக்கதில் இருப்பவர்கள் சிலம்பரசனிடம் இதுகுறித்து கேட்ட பொழுது அவர் கோபித்துக்கொண்டு அவருடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று பிரியாவுடைய சகோதரர் வீட்டுக்குவந்து தன்னுடைய அக்கா இங்கே என சிலம்பரசனிடம் கேட்டுள்ளார். அப்பொழுது பிரியாவை அடித்துக் கொலை செய்து புதைத்து விட்டதாக சிலம்பரசன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரியாவின் சகோதரர் உடனடியாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகார் அடிப்படையில் காவல்துறையினர் சிலம்பரசனிடம் விசாரணை மேற்கொண்டனர். மனைவியை கொன்று புதைத்து விட்டதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து சிலம்பரசனை கைது செய்த போலீசார் எந்த இடத்தில் பிரியா புதைக்கப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அதே பகுதியில் உள்ள எளாவூர் ஏழுக்கல்லு பாலம் அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அந்த பகுதியில் வட்டாட்சியர் முன்னிலையில் கொட்டும் மழையில் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.