Shock over hidden camera in bathroom - police gather Photograph: (police)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பூதாகரமாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் அருகே உள்ள லாலிக்கல் என்ற பகுதியில் மொத்தம் 11 பிளாக்குகளை கொண்டு 'விடியல் ரெசிடென்சி' என்ற பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியானது உள்ளது. அந்தப் பகுதியில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள், வடமாநில பெண்கள் என நூற்றுக் கணக்கானோர் அந்த விடுதியில் தங்கி வருகின்றனர். இந்நிலையில் அந்த தங்கும் விடுதியில் நான்காவது பிளாக்கில் குளியலறை ஒன்றில் ரகசிய கேமரா இருப்பதை வடமாநில பெண்கள் கண்டுபிடித்தனர்.
நீலி குமாரி குப்தா என்ற 23 வயது பெண் ரகசிய கேமராவை வைத்ததாக குடியிருப்பில் இருந்த பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாங்கள் பணியாற்றி வரும் தொழிற்சாலை நிர்வாகத்தை பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் விடுதிக்கு வெளியிலேயே நின்று விடிய விடிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிவுக்கு வந்தாலும், குளியலறையில் ரகசிய கேமரா வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. கேமரா வைத்ததாக குற்றம் சாட்டப்படும் நீலிக்குமாரி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவரை கைது செய்த உத்தனப்பள்ளி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஒரிசாவை சேர்ந்த தன்னுடைய ஆண் நண்பர் சொன்னதை கேட்டு அவ்வாறு கேமராவை வைத்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பெண்ணிடம் ரகசிய கேமராவை வைக்க சொன்ன சந்தோஷ் என்ற அந்த நபரை பிடிப்பதற்காக காவல்துறையினர் பெங்களூரு விரைந்துள்ளனர். நான்காவது பிளாக்கில் மட்டும் தான் இதுபோன்று ரகசிய கேமரா வைக்கப்பட்டதா அல்லது மற்ற பகுதிகளிலும் இதுபோன்று நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பாக போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சேலம், தர்மபுரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் மொத்தம் 10 பிரிவினராக குழுவினராகப் பிரிக்கப்பட்டு விடுதியின் ஒவ்வொரு குளியல் அறையிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
Follow Us