shock incident in Tiruchendur Photograph: (police)
சகோதரியை காதலித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இளைஞரை 16 வயதுக்கும் உட்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் திருச்செந்தூரில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த மணிகண்டன் இன்று வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மூன்று நபர்கள் மணிகண்டனை வழிமறித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடிய மணிகண்டன் அருகில் இருந்த மரக்கடைக்குள்ளே புகுந்துள்ளார்.
அப்பொழுதும் விடாத அந்த கும்பல் மரக்கடைக்குள் சென்று அரிவாளால் வெட்டி சம்பவ இடத்திலேயே மணிகண்டனை படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றியதோடு, அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மணிகண்டனை கொலை செய்த மூன்று பேரும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மணிகண்டன் அதேபகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் 4 மாதங்களுக்கு முன்பு அப்பெண் மணிகண்டனுடன் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிய வந்தது. 17 வயது தான் ஆகிறது என போலீசாரிடம் பெண்ணின் பெற்றோர்கள் புகாரளித்ததால் மணிகண்டனை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
18 வயது பூர்த்தி அடைந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் மணிகண்டன் உடன் அந்த பெண் புதுச்சேரி சென்று விட்டு இரண்டு நாள் கழித்து வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அப்பெண்ணின் சகோதரரான சிறுவன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இந்த கொலையை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.