நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் இரண்டு சிறுவர்கள் மிரட்டலில் ஈடுபட்டு ரவுடித்தனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரஸ்தாவூரைச் சேர்ந்த சக்திகுமார் என்பவர் போலீஸாருக்கு தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் புகாரளித்த சக்திகுமாரை மிரட்டியதோடு அவர் வசிக்கும் ஊருக்குள் சென்று அரிவாளால் தாக்க முயன்றனர்.
இருவரும் ஊருக்குள் அரிவாளுடன் ரகளை செய்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்பொழுது உதவி காவல் ஆய்வாளரை இருவரும் வெட்ட முயன்றனர். இதனால் காத்துக் கொள்வதற்காக போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு இருவரையும் பிடித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/29/a4589-2025-07-29-17-25-55.jpg)
இருவரையும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க திட்டமிட்டனர். இருவரும் சிறார் எனக் கருதப்பட்டதால் பெயர்களும் வெளியிடப்படாமல் இருந்தது. ஆனால் விசாரணையில் துப்பாக்கிச்சூட்டில் காயம் பட்ட சண்முகசுந்தரம் என்பவர் 18 வயது பூர்த்தியானவர் என்பது அவரது பள்ளி சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே அவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். நீதிமன்ற காவல் மற்றும் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிப்பது என அனைத்து நடைமுறைகளும் செயல்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில், கஞ்சா விற்பனை தொடர்பாக தகராறில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை தட்டிக் கேட்ட சார்பு ஆய்வாளரை அச்சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், சிறுவனை தற்காப்புக்காக சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அரிவாளுடன் சிறுவன் துரத்தியதால், சார்பு ஆய்வாளர் ஒரு வீட்டின் கழிவறையில் ஒளிந்து கொண்டு இருந்தாகவும் , அங்கிருந்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அவல நிலைக்கு சென்றுள்ளது என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.கடந்த நான்கு ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன். சிறார்கள் வரை தற்போது போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு,குற்றச் செயலில் ஈடுபடுவது பெரும் வேதனைக்குரியது. சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே , தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி!