உணவு தரமற்று இருந்ததால் கேண்டீன் ஊழியரை அடித்து பரபரப்பாக்கிய சிவசேனா எம்.எல்.ஏ, தற்போது தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். இம்மாநிலத்தில் உள்ள புல்தானா சட்டமன்றத் தொகுதியில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட் என்பவர் எம்.எல்.ஏவாகப் பொறுப்பு வகித்து வருகிறார். சட்டமன்ற உறுப்பினர்களுக்காக மாநில அரசால் ஒதுக்கப்பட்ட மும்பையில் உள்ள ஆகாஷ்வானி இல்லத்தில் இவர் தங்கி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (08-07-25) இரவு இவர், தனது இல்லத்தில் அமைந்துள்ள கேண்டீனில் இருந்து உணவு ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. அதில், இவருக்கு வழங்கப்பட்ட உணவில் குறிப்பாக பருப்பு தரமற்று இருந்ததால், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் கெய்க்வாட் உடனடியாக கேண்டீனுக்கு வந்து, கேண்டீன் ஊழியரை கடுமையாக தாக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து எம்.எல்.ஏவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் இதுபோன்ற செயலை அவர் மீண்டும் செய்தால் நான் மீண்டும் அடிப்பேன் என்று எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் அதிரடியாக கூறினார்.
இந்நிலையில் தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த சஞ்சய் கெய்க்வாட், “மேலாளரும் உரிமமும் இடைநீக்கம் செய்யப்பட்டன. நான் பணியாளரை அடிக்கவில்லை. நான் மேலாளரை அடித்தேன். எனது முறை தவறாக இருக்கலாம், ஆனால் என்னுடைய இலக்கு சரியாக இருந்தது. யாராவது இதுபோன்ற செயலை மீண்டும் செய்தால் மீண்டும் அடிப்பென். ஷெட்டி என்ற ஒப்பந்ததாரருக்கு ஏன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது?. அதற்கு பதிலாக ஒரு மராத்தி நபரிடம் ஒப்பந்தத்தை கொடுங்கள். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது அவர்களுக்கு தான் தெரியும். அவர்கள் நமக்கு நல்ல தரமான உணவை தருவார்கள். தென்னிந்தியர்கள் நடன பார்கள், பெண்கள் பார்கள் நடத்தி மகாராஷ்டிராவின் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள். அவர்கள் நமது குழந்தைகளை சீரழித்துவிட்டார்கள். அவர்களால் எப்படி நல்ல உணவை தர முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். தென்னிந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால் எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட்டுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.