உணவு தரமற்று இருந்ததால் கேண்டீன் ஒப்பந்ததாரரை சிவசேனா எம்.எல்.ஏ அடித்து தாக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். இம்மாநிலத்தில் உள்ள புல்தானா சட்டமன்றத் தொகுதியில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட் என்பவர் எம்.எல்.ஏவாகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்காக மாநில அரசால் ஒதுக்கப்பட்ட மும்பையில் உள்ள ஆகாஷ்வானி இல்லத்தில் எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் தங்கி வருகிறார். நேற்று (08-07-25) இரவு இவர், தனது இல்லத்தில் அமைந்துள்ள கேண்டீனில் இருந்து உணவு ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. அதில், இவருக்கு வழங்கப்பட்ட உணவில் குறிப்பாக பருப்பு தரமற்று இருந்ததால், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் கெய்க்வாட் உடனடியாக கேண்டீனுக்கு வந்து, கேண்டீன் ஒப்பந்ததாரரை கடுமையாக தாக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இடுப்பில் ஒரு துண்டை போர்த்தி நிற்கும் சஞ்சய் கெய்க்வாட், பருப்பு அடங்கிய குழம்பு பாக்கெட்டை கேண்டீன் ஒப்பந்ததாரரிடம் காண்பித்து நுகருமாறு கூறுகிறார். சில நொடிகள் கழித்து சஞ்சய், அந்த நபரை ஓங்கி அறைகிறார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத சஞ்சய், அவர் முகத்தில் ஒரு குத்து விட்டார். இதில் வலி தாங்க முடியாத அந்த நபர் தரையில் விழுந்தார். இருப்பினும் அவர் எழுந்த பின்னும் ண்டும் மீண்டும் சஞ்சய் தாக்குகிறார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து எம்.எல்.ஏவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சஞ்சய் கெய்க்வாட், “நான் ஒரு போர்வீரன். இது எனது இயல்பான எதிர்வினை தான். ஒருவருக்கு இந்தி, மராத்தி அல்லது ஆங்கிலம் புரியவில்லை என்றால், நாங்கள் இப்படித்தான் செய்கிறோம். பழைய உணவை அடையாளம் காண்பதில் எனக்கு நிபுணத்துவம் இருக்கிறது. அதன் வாசணையை ஒரு நிமிடத்திற்குள் என்னால் கண்டுபிடிக்க முடியும். நேற்று இரவு நான் பருப்பு, ரொட்டி மற்றும் சாதம் ஆர்டர் செய்தேன். நான் பருப்பு மற்றும் சாதத்தை கலக்கி சாப்பிட்டேன். முதல் துண்டு சுவை வித்தியாசமாக இருந்தது. நான் இன்னொன்றை சாப்பிட்டேன். அப்போது எனக்கு வாந்தி வந்துவிட்டது. இது அரசு அரசு உணவகம் என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள். நான் மக்களின் பிரதிநிதி. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. உணவின் தரம் மிக மோசமான நிலையில் இருந்தது. நான் அவரை மீண்டும் அடிப்பேன், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஜனநாயகத்தின் மொழியை யாராவது புரிந்து கொள்ளவில்லை என்றால், இது எனது மொழியாக இருக்கும். இது சிவசேனா பாணி” என்று கூறினார்.