காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.பி. சசி தரூரின் மீது சொந்த கட்சியினர் சிலரே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவில் இருந்து விலகிய பிறகு அந்த பதவிக்கான போட்டி நிலவியது. அதில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவுடன் மல்லிகார்ஜுன கார்கேவும், அவரை எதிர்த்து சசிதரூரும் போட்டியிட்டனர். பின்னாளில் கார்கேவே தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இருந்தே கட்சியினர் சிலருக்கு சசி தரூரின் மீது அதிருப்தி இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதனை அதிகரிக்கும் வகையில் சசிதரூரின் அண்மைக் கால நடவடிக்கை இருப்பதாக அக்கட்சியினரே கருதுகின்றனர்.

அண்மைக் காலமாகவே சசிதரூர் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் பாராட்டி வருகிறார். அத்துடன் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று விளக்கமளிக்க சசிதரூருக்கு மத்திய அரசு கொடுத்த முக்கியத்துவம் பேசுபொருளானது. அதில் இருந்து சசிதரூரின் நடவடிக்கை முற்றிலும் மாறியிருப்பதாகவும், தலைமையின் உத்தரவை மீறி பிரதமர் மோடியை புகழ்வதாகவும் அக்கட்சியினர் குற்றம் சாட்டினர். அத்தோடு கேரள காங்கிரஸ் நிர்வாகிகளே சசிதரூரை கடுமையாக சாடி வருகின்றனர்.

இதற்கிடையில், தனக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக சசிதரூர் உண்மையை உடைத்து சில நாட்களுக்கு முன்பு பேசினார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “காங்கிரஸ் தொண்டர்களுடன் 16 வருடம் இணைந்து பணியாற்றி உள்ளேன். 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதற்கு அவர்கள் பெரிதும் உதவி செய்திருக்கின்றனர். அவர்கள் எனக்கு நண்பர்களாக, உறவினர்களாக இருந்திருக்கின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையுடன் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. நான் எந்த கட்சிக்கும் சொல்லப்போவதில்லை. காங்கிரஸ் உறுப்பினராகவே இருப்பேன். இதுகுறித்து காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்” எனத் தெரிவித்தார். சசிதரூரின் இந்த பேச்சு, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலையை சசிதரூர் தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார். மலையாள நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதிய சசிதரூர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலையின் போது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் நியாயப்படுத்த முடியாத கொடூரமான செயல்கள் எனத் தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில் அவர் எழுதியிருப்பதாவது, ‘அவசரநிலையை இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாக மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளக் கூடாது. அதன் பாடங்களை கண்டிப்பாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலையின் போது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் நியாயப்படுத்த முடியாத கொடூரமான செயல்கள். இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, கட்டாய கருத்தடை பிரச்சாரத்தை வழிநடத்தினார். இந்த மோசனமான செயல்கள் தான் அதற்கு உதாரணம். ஏழை கிராமப்புறப் பகுதிகளில், அதன் இலக்குகளை அடைய வன்முறையும் வற்புறுத்தலும் பயன்படுத்தப்பட்டன. டெல்லி போன்ற நகரங்களில் குறிப்பாக குடிசைப் பகுதிகளை இரக்கமின்றி அடித்து அகற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடு இல்லாதவர்களாக மாற்றப்பட்டனர். அவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளப்படவில்லை.

Advertisment

ஜனநாயகம் என்பது சாதாரணமாக எடுத்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. அது தொடர்ந்து வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு விலைமதிப்பற்ற மரபாகும். அனைத்து இடங்களில் உள்ள மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைய இந்தியா 1975 ஆண்டின் இந்தியா அல்ல. நாம் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், வளர்ந்தவர்களாகவும், வலிமையான ஜனநாயகமாகவும் இருக்கிறோம். அதிகாரத்தை மையப்படுத்துதல், கருத்து வேறுபாடுகளை மௌனமாக்குதல், அரசியலமைப்பு பாதுகாப்புகளைத் தவிர்ப்பது போன்றவர்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும் தோன்றக்கூடும். ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.