கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட முடியாத அரசாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கூட்டுறவுத் துறை சார்பில், கடந்த அக்டோபர் மாதம்  மாநில ஆட்சேர்ப்பு மையம் (SRB) மற்றும் மாவட்ட ஆட்சேர்ப்பு மையம் ( DRB) பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாட்கள் கடந்த பின்னும், இதுவரை முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சித்து வருகிறது முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

Advertisment

பெரும் கனவுகளோடு தாங்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளை இதுவரை வெளியிடாத திமுக அரசைக் கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள, திமுக அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 (TNPSC Group 2) தேர்வை முறையாக நடத்த தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், நடந்து முடிந்த கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட முடியாத அரசாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது.

Advertisment

தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவுத் துறை தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.