உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஷலப் பாண்டே ஆவார். இவருக்குப் பாவிக்கா ஷெட்டி என்ற பெண்ணுடன் வாட்சப்பில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் வாட்சப்பில் நட்பாகப் பழகி வந்துள்ளனர். முதலில் சாதாரணமாக அரட்டைகள் மற்றும் கிண்டல்கள் எனத் தொடங்கிய இந்த நட்பு காலப்போக்கில் நெருங்கிய நட்பாக மாறியது. இதனையடுத்து, அப்பெண் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளைக் கூறி, ஷலப்பை ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யும்படி வற்புறுத்தியுள்ளார்.
இந்த ஆசை வார்த்தைகளை நம்பிய ஷலப், அந்த பெண் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 1.92 கோடி அளவிலான பணத்தைப் பணப்பரிமாற்றம் செய்துள்ளார். தொடர்ந்து, பணத்தை முதலீடு செய்து வந்த ஷலப்பிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதில் எதோ தவறு இருப்பதாக உணர்ந்த ஷலப், இது குறித்துக் காவல் துறையில் புகாரளித்தார். இந்த விசாரணையில், ஷலப்பீடம் இதுவரை பேசிப் பழகி வந்தது பெண் இல்லை என்றும், அவருடன் ஒரு ஆண் தான் பெண் போன்று பேசி அவரை ஏமாற்றியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஷலப் பணம் அனுப்பிய வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அதோடு, இந்த மோசடியில் ஈடுபட்ட நபர், குடம்பா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட மிஷ்ரிபூர் டிப்போ பகுதியைச் சேர்ந்த இம்ரான் காசி (34) என்பவர் தான் எனவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தனது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதையடுத்து காசி, தனது நண்பர் ஷேசாத் என்பவரின் உதவியுடன் போலியான ஆதார் மற்றும் பான் அட்டைகளைப் பெற்று, பல வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளார். இதையடுத்து, மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ. 54 லட்சம் காசியின் வங்கிக் கணக்குகள் வழியாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/14/arrest-2026-01-14-17-54-41.jpg)
அந்த வங்கிக் கணக்குகளில் ஒரு மாதத்திற்குள் சுமார் ரூ. 1.52 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், "சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில், பாரதிய நியாய சன்ஹிதாவின் சம்பந்தப்பட்ட பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (D) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து, காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை அன்று காசியைக் கைது செய்தனர். இது குறித்து மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
Follow Us