சென்னை கொளத்தூர் அருகே உள்ள பாலாஜி நகர் அடுத்துள்ள திருப்பதி நகரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் குப்பன், சங்கர் மற்றும் ஹரி என 3 பேர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி கழிவுநீர் கால்வாயில் தூர் வாருவதற்காக 3 பேரும் இறங்கியுள்ளனர். அச்சமயத்தில் மூவரையும் விஷவாயு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த குப்பனின் உடலை மீட்டனர். அதன் பின்னர் உடற்கூறாய்வுக்காக அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயம் விஷவாயு தாக்கியதில் பாதிக்கப்பட்ட சங்கர் மற்றும் ஹரி ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.