திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்துள்ள கர்லம்பாக்கம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவு நீரும் கலந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த பலருக்கும் உடல் நலப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏழுமலை (வயது 55) மற்றும் சுதா (வயது 40) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் இவர்கள் இருவரது மரணத்திற்குச் சுகாதாரமற்ற, கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதே காரணம் எனக் கூறி கிராம மக்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்த சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு இரு மருத்துவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்குள்ள மக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கினர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகித்த குடிநீரைப் பருகிய பெண் உட்பட இருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us