ராமநாதபுரம் மாவட்டத்தில் சைவ, சமண, பௌத்த தடங்கள் அதிகம் உள்ளது திருவாடானை பகுதியில் தான் என மரபு நடை நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. எண்திசை வரலாற்று மரபுநடைக்குழு, ராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் காண இருநாட்கள் சேது நாட்டு மரபு நடைப் பயணம் ஏற்பாடு செய்துள்ளது. திருவாடானையில் தொடங்கிய நிகழ்வில், தலைவர் நித்யகலா செந்தில்குமார் தலைமையில், செயலாளர் ராதா வைத்யநாதன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது, ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டத்தில் தான் அதிக நெல் விளைச்சல் இருக்கும். இதனால் மாவட்டத்தில் அதிகளவு சிவன் கோயில்கள், சமண, பௌத்த தடங்கள் இங்கு உள்ளன. மன்னர்காலத்தில் இப்பகுதியில் பல ஊர்கள் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இவ்வூர் பற்றி திருஞானசம்பந்தர் 11 பாடல்கள் பாடியுள்ளார். அவருடைய மற்ற பதிகங்களில் உள்ளது போல் இதன் 8வது பாடலில் இராவணன் பற்றிய குறிப்போ, 10வது பாடலில் சமண பௌத்த மதங்கள் பற்றிய கண்டனமோ இல்லாமல் உள்ளது ஆச்சரியமளிக்கிறது. அருணகிரிநாதர் திருவாடானை கோயில் முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். தேவாரப்பாடல்களிலும், கல்வெட்டுகளிலும் இவ்வூர், ஆடானை எனப்படுகிறது.
இக்கோயிலில் பாண்டியர், சேதுபதிகள் கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கோயிலுக்கு நெல் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கி.பி.1636-ல், தளவாய் சேதுபதியின் பிரதிநிதி திருமலையன், கோயிலுக்குரிய கிராமங்களில் உள்ளவர்கள், ஒரு காசு, ஒரு பணம், ஒரு கலம் நெல்லு சுவாமிக்குக் கொடுக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார். இதைக் கொடுக்காமல் இருக்க கைகூலி வாங்குகிறவன், பெண்டாட்டியும், உடப்பிறந்தான் மகளையும், மருமகளையும் எதிரியுடன் கூட்டிக்குடுத்த பாவத்துக்கு ஆளாவார்கள் என கல்வெட்டு எச்சரிக்கிறது.
இயற்கைத் துறைமுகங்கள், நெல் விளைச்சல், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாமை, பாதுகாப்பான வணிகப் பாதைகள் ஆகிய காரணங்களால் 2500 ஆண்டுகளாக வெளிநாட்டு, உள்நாட்டு வணிகர், வணிகக் குழுக்கள் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளனர்’ என்றார். பின்பு தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, மாரியூர், திருமாலுகந்தான் கோட்டை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட உள்ளனர். இதில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 50 வரலாற்று ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Follow Us