தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் குடும்பத்தார், த.வெ.க. தலைவர் விஜய்க்கு வேண்டப்பட்டவர்கள். அதன் காரணமாகவே அஜிதா, தனக்கு தலைவர் விஜய் மாவட்ட பொறுப்பு தருவதாகத் தெரியப்படுத்தியிருக்கிறார். நான்தான் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்று வெளிப்படையாக அறிவித்த அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளர்களுடன் தொகுதியில் கட்சியின் சார்பில் சில பல பணிகளை மேற்கொண்டார். மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று அவர் கூறி வந்த நிலையில் கட்சித் தலைமையோ மத்திய மாவட்டச் செயலாளராக தூத்துக்குடி சாமுவேல் ராஜை அறிவித்தது. இதனால் ஆத்திரமான அஜிதா ஆக்னல், தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூர் சென்று விஜயின் காரை வழிமறித்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் நடிகர் விஜய் அவரைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்றுவிட்டார். இதனால் தாளாத அதிருப்தியுடன் தூத்துக்குடி திரும்பிய அஜிதா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை அருந்தி தற்கொலைக்கு முயன்றவர் சாவின் விளிம்பு வரை சென்று திரும்பினார். அப்படியிருந்தும் த.வெ.க. தலைமை, அஜிதா பக்கம் திரும்பி பார்க்கவில்லை.
இந்த நிலையில் தான் தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்துள்ள அஜிதா, தனக்கு தேர்தலில் போட்டியிட நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறார். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அஜிதா ஆக்னலின், மனுவை பரிசீலிக்கவேண்டும் என்று தூத்துக்குடியின் முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கம் சார்பில் பனையூர் த.வெ.க அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்தக் கடிதத்தில் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே மிகத் தீவிரமாக வேலை பார்ப்பவர் அஜிதா ஆக்னல். மீனவர் சமூகத்தைச் சார்ந்தவர் என்றாலும் அவர் சாதி மத வேறுபாடின்றி ஆதரவைப் பெற்றுள்ளார். கட்சித் தொடர்பான சமூக நலப் பணிகளை கிராமங்கள் தோறும் கொண்டுசென்றவர். அதோடு த.வெ.க.வில் உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அதிமாக்கியிருக்கிறார். எனவே தூத்துக்குடியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டால் நிச்சயம் வெற்றி வேட்பாளராவார் என்று ஏகமாய் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் பரபரப்பாக வெளியாக, தொடர்புடைய முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கத்திற்கு இந்தத் தகவல் தெரியவர, மிரண்டுபோன அந்த சங்கத்தின் தலைவர் கனகராஜ், பொதுச் செயலாளர் ராஜி, பொருளாளர் மிக்கேல் ஆகியோர் இணைந்து ஒரு பொது வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் எங்களுக்கும் இந்த லெட்டர் பேடுக்கும் சம்மந்தம் இல்லை. சங்கத்தில் லெட்டர் பேட் தவறாகப் பயன்படுத்தப்பட்டு எங்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று வெட்டவெளிச்சம் ஆக்கிவிட்டனர்.
இந்தப் போலி லெட்டர் பேட் விவகாரம், தூத்துக்குடி அரசியல் களத்தைத் தகிக்க வைக்க அஜிதா ஆக்னலே தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த லெட்டர் பேடில் தனது ஆதரவாளர்களைக் கொண்டு இப்படி ஏகமாக பில்டப் கொடுத்திருக்கிறாராம் என்றும் பேசப்பட தூத்துக்குடி சீட்டை பெறுவதற்கு நான் எந்தவிதமான எல்லையையும் தாண்டத் தயார் என்று அஜிதா ஆக்னலின் தரப்பு தீவிரமாகச் செயல்படுகிறதாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/ajitha-2026-02-17-19-42-07.jpg)