தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (27-09-25) மூன்றாவது கட்டமாக நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தினார். நாமக்கல்லில் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக விஜய், கரூருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர். விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்தாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பரப்புரையில் பங்கேற்ற 29 பேர் உயிரிழந்ததாகவும் 2 குழந்தைகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை தூக்கிச்செல்ல ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளதால் கரூர் அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது. பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லப்படும் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கரூர் அரசு மருத்துவமனை ஆய்வு செய்த பின்பு இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கூடுதலாக நாமக்கல் மற்றும் சேலத்தில் இருந்து மருத்துவர்கள் வருகிறார்கள். தேவையான அளவுக்கு மருத்துவ மருந்து மாத்திரைகள் எல்லாமே இருக்கிறது. மருத்துவர்களும் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை மிக வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு நாங்களே போய் நேரில் பார்த்தோம், அங்கே மருத்துவர்களை சந்தித்தோம். அங்கு இருக்கிற மருத்துவர்களுக்கு சிகிச்சை கொடுத்துட்டு இருக்கிறார்கள். எந்த சிகிச்சையாக இருந்தாலும் சரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் எந்த கட்டணமும் வாங்க வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறோம்.
மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் எல்லாம் நேரில் இருந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். முழுவதுமாக மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்கக்கூடிய அனைத்து மருத்துவர்களும் இப்போது பணியில் திரும்பி இருக்கிறார்கள். மொத்தம் 31 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதில் பெண்களும், குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். மேலும் கூடுதலாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விரைவாக சிகிச்சை கொடுத்துட்டு இருக்கிறார்கள்” என்று கூறினார்.