கரூர் அருகேயுள்ள கோடங்கிபட்டியில் இன்று (17.09.2025) திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக துவங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றும் செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது என்பதால், இம்மூன்று நிகழ்வையும் சேர்த்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. 

Advertisment

இந்நிலையில் திமுக தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழாவுக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதாவது மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து  மாநாட்டு மேடை வரை ரோடு ஷோ போன்று வாகனத்தில் இருந்தவாறு கையை அசைத்தவாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடைக்கு சென்றார். அதன் தொடர்ச்சியாக திமுக முப்பெரும் விழா தொடங்கியது. அதன்படி செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “அனைவரையும் வருக வருக என்று அன்போடு வரவேற்று உங்களின் வருகை 2026 தேர்தலில் நம் வெற்றிக்குக் கட்டியம் கூறுகிறது. வருக வருக என வரவேற்று மேற்கு மண்டலத்தில் இருந்து சொல்கின்றேன். முதல்வர் மு.க. ஸ்டாலினின் பாதம் தொட்டு உறுதியாக சொல்கின்றேன். 2026 திமுகவின் வெற்றிக் கணக்கை இங்கிருந்தே தொடங்குவோம் என்ற உறுதியை சொல்லி எதிரிகள் யாராக இருந்தாலும் எந்த வடிவில் வந்தாலும் எத்தனை பேராக வந்தாலும் உறுதியாக சொல்கின்றேன் நாம் தான் ஜெயிக்கிறோம. நாம் மட்டும்தான் ஜெயிக்கிறோம். வெல்வோம் 200. படைப்போம் வரலாறு. 

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வை கரூரில் நடத்த வாய்ப்பு தந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை கோடான கோடி நன்றி மலர்களைப் பணிவன்போடு பாதம் பணிந்து சமர்ப்பிக்கிறேன்” எனப் பேசினார். அதனைத் தொடர்ந்து மேடையில் இருந்த தலைவர்களுக்கு நினைவுப் பரிசுகளை செந்தில் பாலாஜி வழங்கினார். இதனையடுத்து திமுக சார்பில் ஏற்கனவே விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி உரையாற்றினார்.