நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுத்துறை எம்.பியான சுதா நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற்று வருகிறார். இந்த சூழலில், அவரது தங்கச் செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற குடியிருப்பு அருகே இன்று (04-08-25) காலை காங்கிரஸ் எம்.பி சுதா நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், எம்.பி சுதா கழுத்தில் இருந்த 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்.பி சுதா, சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செயின் பறிப்பு சம்பவம் குறித்து எம்.பி சுதா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “நானும் என்னோடு சக தோழரான மாநிலங்களவை உறுப்பினர் சல்மாவும் நடைப்பயிற்சிக்கு சென்றோம். பாதுகாப்பான வழியான தூதரக வழித்தடத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் அந்த பிளாட்பார்மை ஒட்டிதான் நடந்து கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிராக ஒரு நபர் ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு எதிரே வந்தார். அவருக்கு வழிவிட்டு போவோம் என்று நான் கொஞ்சம் விலகினேன். விலகிய பொழுது ரொம்ப அருகில் வந்தவர் என் தங்கச் சங்கிலியை பிடுங்கினார். நான் அதை உணர்வதற்குள் என் துணியையும் கிழித்துவிட்டார். இதில் எனக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

நான் கத்தினேன். ஆனால் அவர் எதையோ சாதித்து மாதிரி ரொம்ப மெதுவாக செல்கிறார். சாலையில் கொஞ்ச பேர் இருந்தார்கள். நானும் கத்தினேன், என்னுடன் இருந்த சக எம்பியும் உதவி பண்ணுங்க கத்தினார். ஆனால், அங்கு இருந்த யாருமே உதவி செய்ய வரவில்லை. எனக்கும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு, தமிழ்நாடு விருந்தினர் மாளிகைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். இரண்டு நிமிடத்திலேயே, ரோந்து பணியில் இருந்த டெல்லி போலீஸ் வாகனத்தை பார்த்தேன். உடனடியாக நானும் சக நாடாளுமன்ற உறுப்பினரும் விரைந்துச் சென்று போலீஸ் அதிகாரியிடம் நடந்த விஷயத்தை அவர்களிடம் சொன்னேன். என் துணி கிழந்திருந்ததையும் டெல்லி போலீஸ் அதிகாரி பார்த்தார். ஆனால், அவர் மிகவும் எளிமையாக உங்க பெயர் கொடுங்கள் நம்பர் கொடுங்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுங்கள் என்கிறார். இதுதான் அவருடைய பேச்சாக இருந்தது. உடனடியாக வாகனத்தில் இருந்த வாக்கி டாக்கியை எடுத்து எச்சரிக்கை கொடுத்திருந்தால் கூட மற்ற டிராபிக் ஏரியாவிலோ அல்லது வேறு இடத்திலேயோ அவரை கட்டாயமாக பிடித்திருக்கலாம். செயினை பறிகொடுத்ததை விட இந்த சம்பவங்கள் தான் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. டெல்லி காவல்துறை அலட்சியமாக இருந்தார்கள்” என்று வேதனையோடு கூறினார்.