ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை தனது பாடலின் மூலம் சமீப காலமாக வெளிப்படுத்தி வருபவர் மலையாள ராப் பாடகர் வேடன். இலங்கை ஈழத் தாய்க்கும், மலையாளி தந்தைக்கும் பிறந்த இவரது உண்மையான பெயர் கிரன்தாஸ் முரளி. சிறு வயதில் இருந்தே மீன் உள்ளிட்டவற்றைக் குறி வைத்து பிடிப்பதில் கை தேர்ந்தவராக இருந்ததால் நண்பர்கள் செல்லமாக வேடன் என்று அழைக்கத் தொடங்கினர். ஆனால், அதுவே காலப்போக்கில் அடையாளப் பெயராக மாறியது.

‘வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்’ என்ற ஆல்பம் பாடல் மூலம் பரவலாக அறியப்பட்டவர் தான் கிரந்தாஸ் முரளி என்கிற வேடன். வலி மிகுந்த வரிகளால் உள்ளூர் பிரச்சினை முதல் உலகப் பிரச்சினை வரை தனது பாடலில் அதிரடியாக எடுத்துக் குறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு கணிசமான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். அதே சமயம் ‘மீ டு’ புகார், போதைப் பொருள் விவகாரம், அரசியல் என்று வேடனைச் சுற்றி சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை.

இந்திய அளவில் மீ டு விவகாரம் பூதாகாரமாக மாறிய சமயத்தில் 2021 ஆம் ஆண்டு ராப்பர் வேடன் மீது பாலியல் புகார் எழுந்தது. ஆனால், அதுகுறித்து எந்த வழக்கும் பதியப்படாததால் அந்தப் புகார் சத்தமின்றி மறைந்தது. ஆனால் ஆறு கிராம் கஞ்சா வைத்திருந்த வழக்கில் ஏப்ரல் மாதம் கேரள காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்பு அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த வேடனை, சிறுத்தைப் பல் அணிந்திருந்ததாகக் கூறி மற்றொரு வழக்கில் கேரள வனத்துறை கைது செய்தது. பின்பு, சிறுத்தைப் பல் ரசிகர் ஒருவர் பரிசாகக் கொடுத்ததாகத் தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

பின்பு வெளியே வந்த அவர், மது மற்றும் போதைப் பொருள் நல்ல பழக்கம் கிடையாது. யாரும் அதனைப் பயன்படுத்த வேண்டாம். இனி நான் நல்ல மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என்று தனது ரசிகர்களிடமும், நலம் விரும்பிகளிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஆனாலும், சர்ச்சைகளும், புகார்களும் வேடனை விடுவதாக இல்லை. வேடனின் இசை ஆல்பம், பிரதமர் மோடியை அவமதிப்பதாகவும், சாதிப் பிரிவினையை ஊக்குவிப்பதாகவும் பாலக்காடு பாஜக கவுன்சிலர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். மேலும் வலது சாரி அமைப்புகள் வேடனுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்களை அடுக்கினர்.

Advertisment

அதனால், வேடனை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடது சாரி அமைப்புகள் தள்ளப்பட்டனர். கேரளாவைத் தாண்டி வேடனின் புகழ் தமிழ்நாடு வரை பரவியது. அரசியல் தளங்களிலும் ஆதரவு பெருகியதையடுத்து அடுத்தடுத்து கம்யூனிஸ்ட் மேடைகளிலும் வேடன் தோன்ற ஆரம்பித்தார். இதனிடையே சினிமாவில் பாடல் எழுதுவது, இசையமைப்பது என்று கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில்தான், தற்போது பெண் மருத்துவர் ஒருவர் வேடன் மீது கொடுத்துள்ள பாலியல் புகார் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், வேடன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், 2021 முதல் 2023 காலகட்டம் வரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வேடன் பல முறை தன்னுடன் தனிமையில் இருந்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், தன்னைப் போன்றே வேறு ஒரு பெண்ணை வேடன் ஏமாற்றியது தெரிந்த பின்னர் புகார் கொடுக்க முன் வந்ததாகப் பெண் மருத்துவர் தெரிவித்திருக்கிறார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த கோழிக்கோடு, திருவாக்கரை போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.