மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள காவல் பயிற்சி மையங்களில் கடந்த ஜூலை 1ஆம் தேதி புதிதாக பணியமர்த்தப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்கள் பயிற்சியைத் தொடங்கினர். இந்த நிலையில், அம்மாநில மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ஏடிஜி (பயிற்சி) ராஜபாபு சிங், சமீபத்தில் அனைத்து காவல் பயிற்சி மையங்களின் எஸ்.பிக்கள் மற்றும் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.

அப்போது வீட்டைப் பற்றி ஏங்குவதாகவும் அதனால் பயிற்சி காவலர்கள் இடமாற்றக் கோரிக்கைகள் கோருவதாகவும் புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏடிஜி ராஜபாபு சிங், வீட்டு நினைப்பைத் தவிர்க்க அனைத்து பயிற்சி காவலர்களும் தினமும் தூங்குவதற்கு முன்பு ராமசரிதமானஸ் (ராமர் வாழ்க்கை புத்தகம்) புத்தகத்தில் இருந்து வசனங்களை ஓதுமாறு அறிவுரை கூறியிருக்கிறார்.

இது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏடிஜி ராஜபபு சிங், ‘பயிற்சி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே மைய இடமாற்றங்களுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் எனக்கு வந்துள்ளன. சிந்த்வாராவைச் சேர்ந்த ஒரு காவலர் பச்மாரிக்கு மாற விரும்புகிறார்; ரத்லம் அல்லது ஜபுவாவைச் சேர்ந்த ஒருவர் உஜ்ஜைனியைக் கேட்கிறார். பயிற்சி முடியும் முன்பே பாதியிலேயே அவர்கள் வீட்டைப் பற்றி ஏங்குகிறார்கள். ராமரின் 14 ஆண்டுகால வனவாசத்தில் இதற்கான பதில் இருக்கிறது. காட்டில் ராமர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டார், இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்தார், உயிர்வாழும் திறன்களைக் கற்றுக்கொண்டார். குறைந்த வளங்களைக் கொண்டு போர்களை நடத்தினார், ராவணனை தோற்கடித்தார். நமது காவலர்களும் அறிமுகமில்லாத சூழல்களில் செழித்து வளர கற்றுக்கொள்ள வேண்டும். புதிய வகையான குற்றங்களை எதிர்கொள்ள வேண்டும், புதிய சட்டங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். ராமசரிதமானஸ் அதற்கு ஒரு வழிகாட்டியாகும்’ என்று கூறினார்.