Advertisment

மூத்த கல்வியாளர் வசந்தி தேவி மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

vasantha-devi-mks

மூத்த கல்வியாளரும், பேராசிரியருமான வசந்தி தேவி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளில் மிகச் சிறந்த பங்களிப்பினை ஆற்றியதோடு, சமூகத்தின் மீதும் பெரும் அக்கறை கொண்டவராகப் பேராசிரியர் வசந்தி தேவி திகழ்ந்தார். 

Advertisment

தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் 'தேசிய கல்விக் கொள்கை 2020'- இன் தீமைகள் குறித்தும் மிகத் தீவிரமான பரப்புரையை அவர் மேற்கொண்டிருந்தார். பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராகவும் உறுதியாகத் தனது கருத்துகளை முன்வைத்து வந்தார். அனைவருக்கும் சமச்சீரான கல்வி கிடைக்க வேண்டும் என இறுதிமூச்சு வரையில் போராடி வந்த வசந்தி தேவி, கல்வியானது மாநிலப் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தவர் ஆவார். கல்வியில் மதவாதம், வியாபாரம், ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வந்தார். கல்வித் தளத்தில் மட்டுமல்லாது பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் போராடிய செயற்பாட்டாளர் வசந்தி தேவி. 

Advertisment

திராவிட மாடல் அரசு பள்ளிக் கல்வித் துறையில் தொடங்கிய கலை வகுப்புகள், தேன்சிட்டு சிறார் இதழ் உள்ளிட்ட முன்னெடுப்புகளுக்குப் பாராட்டு தெரிவித்தும், திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கியும் ஊக்கப்படுத்தியவர். அவரது திடீர் மறைவு கல்வித் துறை மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டுக் களத்தில் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், கல்விப்புலத்தைச் சேர்ந்த அறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன” எனத் தெரிவித்துள்ளார். 

condolence education manonmaniam sundaranar university mk stalin passed away
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe