Senior Congress leader digvijaya singh praises BJP, RSS gets embroiled in controversy
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸை பார்த்து தங்கள் கட்சி பாடம் கற்க வேண்டும் என்ற ரீதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங், மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம், குஜராத்தில் நடந்த ஒரு பொது நிகழ்வில் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வான் அருகே நரேந்திர மோடி தரையில் அமர்ந்திருப்பதைக் காட்டும் 1990 களில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “இந்தப் படத்தை நான் கியோரா (Quora) தளத்தில் கண்டேன். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிமட்ட சேவகரும், பா.ஜ.கவின் அடிமட்ட தொண்டரும் எவ்வாறு தலைவர்களின் காலடியில் தரையில் அமர்ந்து மாநிலத்தின் முதலமைச்சராகவும் நாட்டின் பிரதமராகவும் ஆனார்கள்?. இது தான், அமைப்பின் சக்தி, ஜெய் சியா ராம்” என்று தெரிவித்தார். இந்த கருத்தை பதிவிட்டது மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை டேக் செய்தது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இவரின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் பவன் கேரா பதிலளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, “காங்கிரஸ் முடிந்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு, நான் சொல்ல விரும்புகிறேன். நமக்கு அதிகாரம் குறைவாக இருக்கலாம், ஆனால் நம் முதுகெலும்பு இன்னும் நேராக உள்ளது. நாம், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், மதச்சார்பின்மை மீதும், ஏழைகளின் உரிமைகள் மீதும் சமரசம் செய்யவில்லை. நாம் அதிகாரத்தில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் சமரசம் செய்ய மாட்டோம். காங்கிரஸ், மதத்தின் பெயரால் ஒருபோதும் வாக்குகளைக் கோரியதில்லை. கோவில்-மசூதி பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் ஒருபோதும் வெறுப்பைப் பரப்பியதில்லை. காங்கிரஸ் ஒன்றுபடுகிறது, அதே நேரத்தில் பாஜக பிரிக்கிறது. காங்கிரஸ் மதத்தை நம்பிக்கையாக வைத்திருந்தது. ஆனால் சிலர் மதத்தை அரசியலாக மாற்றியுள்ளனர். இன்று, பாஜகவிடம் அதிகாரம் உள்ளது, ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. காங்கிரஸ் ஒரு சித்தாந்தம்ம் சித்தாந்தங்கள் ஒருபோதும் இறக்காது” என்று கூறினார்.
Follow Us