Senior Congress leader Bhupan Kumar Bora quits Congress and joins BJP
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் பூபன் குமார் போரா எடுத்துள்ள முடிவு காங்கிரஸ் நிர்வாகிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. போரா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை காங்கிரஸ் மாநில தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் கௌரவ் கோகோய் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், பிப்ரவரி 16 அன்று போரா, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார். அதில், ‘கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று (22-02-26) யாரும் எதிர்பாராத வகையில், போரா தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அசாம் மாநிலத்தின் முதல்வரும், பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபன் குமார் போரவை பாஜகவிற்கு அன்புடன் வரவேற்றார். அதோடு, ‘பூபன் குமார் போரா இன்று முதல் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்குகிறார்’ என்று சர்மா தெரிவித்தார்.
இதில் போரா பேசுகையில், “நான் 32 ஆண்டு காலமாகக் காங்கிரஸுடன் ஆழமான குடும்பத் தொடர்பைக் கொண்டிருந்தேன். ஆனால், அசாமில் காங்கிரஸின் இன்றைய நிலைமை மோசமான நிலையில் இருக்கிறது. அசாம் மாநிலத்தைப் பற்றி அக்கறை கொண்டவர்கள் இனி காங்கிரஸில் இருக்க முடியாது. இதற்கு, ராஜினாமா கடிதத்தில் நான் எழுதிய ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷெர்மன் அலி, அசாம் இயக்கத்தின் அனைத்து தியாகிகளையும் கொள்ளையர்கள் என்று கூறினார். அதனால், நான் உடனடியாக அவரை கட்சியிலிருந்து வெளியேற்றினேன். ஆனால், காங்கிரஸ் தலைவர் அமன் வதுட் ஒரு புத்தகத்தில் அசாமியர்கள் பூர்வீகவாசிகள் அல்ல என்று எழுதியுள்ளார். இருப்பினும், அவருக்குக் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. இது வேதனையளிக்கிறது” என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இது குறித்து, அசாம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா கூறுகையில், “போரா கட்சியிலிருந்து வெளியேறியது எங்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் போட்டியிடத் தயாராகி வந்த அவரது தொகுதியில் உள்ள கட்சித் தலைவர்களும், தொழிலாளர்களும் அவருடன் செல்ல விரும்பவில்லை. மேலும், அவர் வெளியேறினாலும், நாங்கள் காங்கிரஸிலேயே இருப்போம் என்று அவர்கள் கூறியுள்ளனர். அதனால், அவர் கட்சியிலிருந்து விலகிச் சென்றாலும், அது காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித இழப்பையும் ஏற்படுத்தாது” என்று கூறியுள்ளார்.
Follow Us