Sengottaiyan's speech at the meeting of TVk executives led by Vijay
தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று (25-01-26) சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியதை அடுத்து, இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தவெக கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த கூட்டத்தில் பேசிய தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது, “50 ஆண்டு காலத்திற்கு பிறகு எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற விஜய்யோடு இணைந்து ஆற்றுகிற பணியை எனக்கு தந்திருக்கிறார்கள். அவர் திரைப்படத்தில் மட்டும் ஹீரோ அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்திலும் ஹீரோ என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு நபருக்கு ரூ.1000 பணத்தை கொடுத்து கூட்டத்துக்கு வரவழைத்திருக்கிறார்கள். தொலைத்தூரத்தில் இருந்து வந்த தாய்மார்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். திமுகவை வீழ்த்துவோம் என்று அவர்கள் குரல் கொடுத்தார்கள். ஒருத்தர் கூட கை தட்டவில்லை. ஆனால், திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே தளபதி நம்முடைய தளபதி தான்.
10 கூட்டணி, 8 கூட்டணி என இதையெல்லாம் தூள் தூளாக ஆக்கக்கூடிய சக்தி யாரிடத்தில் இருக்கிறதென்றால், வெற்றி கழகத் தலைவருக்கு மட்டும் தான் உண்டு. நான் பல தலைவர்களை பார்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரை பார்த்தேன், அப்போது எனக்கு 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அப்போது உங்களைப் போல தான் நானும் இருந்தேன். ஆனால், நம்முடைய தலைவரோடு இணைந்ததற்கு பிறகு எங்கு சென்றாலும் கூட்டம் அலைமோதுகிறது. செல்ஃபி எடுக்கிறார்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இது இந்திய வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத புகழ். நமது நோக்கம் தமிழ்நாட்டு மக்களை காப்பது தான். ஏறத்தாழ ரூ.1000 கோடி வருவாய்யை விட்டுவிட்டு மக்களை காப்பதற்கு தலைவர் இங்கு வந்திருக்கிறார் என்றால், தலைவருடைய ஆற்றலும், தொலைநோக்கு சிந்தனையும் மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். எந்த வீட்டை எடுத்துக்கொண்டாலும் நமக்கு தான் ஓட்டு. இந்தியாவில் உள்ள அனைத்து பேரும் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள்.
டெல்லியில் இருந்து ரயிலிலும், காரிலும் வர முடியும். ஆனால் செல்லுகின்ற பாதை எதுவாக இருந்தாலும் சென்னை என்ற இடத்தை நோக்கி மக்கள் வருகிற வரலாறு விஜய்க்கு மட்டும் தான் இருக்கிறது. இரு கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், தலைவர்களே அல்ல. தலைமை என்பது வேறு. தலைவரை தமிழ்நாட்டு முதல்வராக ஆக்கிய தீருவோம் என்ற சிந்தனையோடு மக்கள் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். நாளை தமிழ்நாட்டை ஆளக்கூடிய ஆற்றலும், சிந்தனையும், தொலைநோக்கு பார்வையும், சாதி மத வேறுபாட்டற்ற சமுதாயத்தை உருவாக்கக்கூடிய ஒரே தலைவர் விஜய் தான். எந்த சக்தியாலும், நம்மை தடுத்து நிறுத்த முடியாது. விஜய் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. தூங்கி கொண்டிருப்பவர்களின் காதுகளில் விசிலை அடித்து விடாதீர்கள், ஓட்டு போய்விடும். பேருந்து நிலையத்தில் உள்ள பெரியவரிடம் விசில் அடித்தால் அவர் தடுமாறி விடுவார்” என்று பேசினார்.
Follow Us