Sengottaiyan's relative joins AIADMK
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் இணைந்தார். தவெக கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்த செங்கோட்டையனுக்கு தவெக கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
தவெகவில் இணைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதற்கிடையில் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிச்செட்டிபாளையத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்று செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், செங்கோட்டையனின் அண்ணன் மகன், அதிமுகவில் இணைந்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. செங்கோட்டையன் அண்ணன் மகனான கே.கே.செல்வம் திமுகவில் இருந்து விலகி, சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.கே. செல்வம், “2026 சட்டமன்றத் தேர்தலில் யாரை வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாலும் அவரே இரட்டை இலை சின்னத்தில் அங்கு வெற்றி பெறுவார். 1996 வரை நானும் செங்கோட்டையனும் ஒரே குடும்பத்தில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். 2019இல் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் செய்த சில வேலைகள் காரணமாக நான் இந்த இயக்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். அவர், அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு தவெகவுக்கு சென்றதை எங்களால், எங்கள் குடும்ப உறுப்பினர்களால், எங்கள் கோபி தொகுதி மக்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை” என்று கூறினார்.
Follow Us