Sengottaiyan's photo goes viral - loyalty to Jayalalithaa goes beyond party Photograph: (admk)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (27.11.2025) காலை 10:00 மணியளவில் இணைத்துக் கொண்டார். சென்னையை அடுத்துள்ள பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய் செங்கோட்டையனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் கட்சியின் துண்டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பதிலுக்கு செங்கோட்டையனும் விஜய்க்குச் சால்வை அணிவித்தார். மேலும் கட்சியின் உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார். அதோடு செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய, கழக, பகுதி நிர்வாகிகளும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களுமான ஏராளமானோர் அங்கு வருகை தந்து தங்களை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை செங்கோட்டையன் மற்றும் தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,சிடி நிர்மல் குமார் ஆகியோர் கூட்டாகச் சந்தித்தனர். தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் செங்கோட்டையனின் சட்டை பாக்கெட்டில் ஜெயலிதாவின் படம் இருந்தது. மாற்றுக் கட்சிக்கு சென்ற பின்னரும் ஜெ.மீதான விசுவாசம் தொடர்வதாக குறிப்பிட்டு பலரும் அந்த படத்தைப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
Follow Us