தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் 296 பிறந்த நாள் விழா, நேற்று (03-01-26) ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன், வேலு நாச்சியார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் கே.ஏ. செங்கோட்டையன் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கண்டவர் வேலு நாச்சியார். அப்படிப்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரரை தான் தமிழக வெற்றிக்கழக கொள்கை தலைவராக ஏற்று உள்ளோம். தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில், 10க்கு 8 பேர், விஜய்யை ஆதரிக்கிறார்கள் என்று ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில், தலைசிறந்தவராக இருப்பவர் விஜய். தமிழக வெற்றி கழகம் வருகிற தேர்தலை சந்திக்கும் போது, மக்களால் மக்களாட்சி மலர்கின்ற நல்லாட்சியை கொடுக்கக் கூடிய தலைவர் விஜய். மாற்றங்கள் வேண்டும் என்ற முறையில் அனைவரும் பணிகளை ஆற்றி வருகிறோம். வெற்றி என்ற இலக்கை தமிழக மக்களால் உருவாக்குகிற காலம், நேற்றைக்கு முன்தினம் தொடங்கி உள்ளோம்.
2026 தேர்தல் என்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குகிற நாளாக அமையும். பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்கின்ற தலைவராக, புதிய வரலாற்றைப் படைக்கின்ற தலைவராக விஜய் எதிர்காலத்தில் திகழப் போகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் விருப்ப மனு பெறுவது குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான் முடிவு செய்வார். தி.மு.க வெற்றி பெறுவதற்காக பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதிகளை தந்தார்கள். இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் போராட்டம் வலிமை பெற்றுக் கொண்டுள்ளது. பெரிய தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் பொங்கலுக்குள் இணைவார்கள். ஒவ்வொரு இயக்கமும் ஒன்றிணைவது என்பது அவரவர்கள் முடிவு செய்யும் ஒன்று, பொறுத்திருந்துதான் அதை பார்க்க வேண்டும். தமிழக வெற்றி கழக தலைவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி தான் தமிழக வெற்றி கழகத்தில் இணையும். அவ்வாறு இணைப்பவர்களை வாழ்த்தி வரவேற்போம்.
மேலும், அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரு கட்சிகளையும் தாக்கி பேசுவது தமிழக வெற்றி கழகம் தான், அவ்வாறு இருக்கும் போது தமிழக வெற்றி கழகம் எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். காய்கிற மரத்தில் கல்லடி படுவதைப் போல, வெற்றி என்ற முடிவை மக்களால் மிக விரைவில் தெரிவிக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்துதான், எதிர்க்கட்சி ஆளும் கட்சியை தாக்குவதில்லை, ஆளும் கட்சி எதிர்கட்சியின் குறைபாடுகளை சொல்வதில்லை, எல்லோரும் ஒருமுகமாக தமிழக வெற்றி கழகத்தை தாக்கி கொண்டுள்ளனர்” என்று அவர் கூறினார். த.வெ.க. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, “தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் கருத்துக்களை பரிமாறலாம், பேச்சுவார்த்தை என்பது தலைவர் விஜய் உடன் கலந்து பேசுவது தான் பேச்சு வார்த்தையாக இருக்கும், பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/sen-2026-01-04-08-01-20.jpg)