Sengottaiyan speech at a TVK campaign rally in erode
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை அடுத்து, 81 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று (18-12-25) மக்கள் சந்திப்பு பரப்புரையை நடத்தவுள்ளார். ஈரோட்டின் விஜயமங்கலத்தில் நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை காண, இன்று அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதற்காக தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்கு கையசைத்தப்படி வெளியே வந்த விஜய், தனது கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டார். கோவையில் இருந்து பரப்புரை நடக்கும் இடத்திற்கு கார் மூலம் சாலை மார்க்கமாக வந்தார்.
அதனை தொடர்ந்து வாகனத்தில் நின்றபடியே தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர், “பெரியார் பிறந்த மண்ணில், தவெக தலைவர் விஜய் இங்கு வந்துள்ளார். இங்கு கூடியிருக்கின்ற கூட்டத்தை பார்க்கும் போது நாளைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வரலாற்றை படைக்கின்ற கூட்டமாக இங்கு இருக்கிறது. ஆட்சி வர வேண்டும் என்று கனவு காண்கிறார்கள் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களை ஆளப்போவது தளபதி தான். இதை யாராலும் மாற்றி காட்ட முடியாத வரலாறு தான் பெரியார் மண்ணில் இங்கு காணுகின்ற காட்சியை காண்கிறோம். தந்தை பெரியார் குறிப்பிட்டதை போல், ஏழை எளியோர்களின் கண்ணீரை தீர்ப்பதற்கு ஒரு நல்ல தலைமை வேண்டும் என்ற பல நாட்களாக மக்களுடைய கனவு இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
எல்லோரும் கூடுவார்கள், கூட்டம் கூடும், கலைந்து போகும். ஆனால், நம்முடைய கூட்டம் எதிர்கால தமிழகத்தை உருவாக்குகின்ற வெற்றிக் கழகத் தலைவருடைய கூட்டம். தலைவரைப் பொறுத்தவரை மனிதநேயமிக்கவர், நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர். ஓராண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை தேவையில்லை விட்டுவிட்டு மக்களுக்கு பணியாற்ற வந்திருக்கிறார். எம்.ஜி.ஆரை பார்த்தேன், இன்றைக்கு தளபதியை காண்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இது தீர்ப்பளிக்கிற கூட்டம். நீங்கள் திரண்டு வந்தால் நாடு தாங்காது. இந்த கட்சி எவ்வளவு வெற்றி போகிறது என எல்லோரும் சொன்னார்கள். 234 தொகுதிகளிலும் அவர் யாரை விரல் காட்டுகிறாரோ அவர் தான் தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர். எனவே வெற்றியைத் தாருங்கள்” என்று கூறினார்.
தவெக நிர்வாகி செங்கோட்டையன், விஜய்யை தளபதி என்று குறிப்பிட்டு பேசும் போது, தவறுதலாக புரட்சி என்று எம்.ஜி.ஆரின் பட்டத்தை குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us