Sengottaiyan speaks out Edappadi Palaniswami is A1 in the Kodanad case
முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நேற்று முன்தினம் (30-10-25) பசும்பொன்னில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் பங்கேற்று கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முத்துராமலிங்க தேவருக்கு கூட்டாக மரியாதை செலுத்தியது மட்டுமல்லாமல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியது. இதனால், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் இன்று (01-11-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேவருக்கு மரியாதை செலுத்தி அந்த பூஜையில் கலந்து கொண்ட எனக்கு கிடைத்த பரிசுதான் என்னை இந்த இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது. நீக்கப்பட்டவர்களுடன் பேசியது உண்மை தான். நீங்களும் இந்த இயக்கத்தை வலிமை சேர்க்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர்களிடம் பேசியிருக்கிறேன். நான் அதை மறுக்கவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி நான் திமுகவிற்கு உறுதுணையாக இருப்பதாக இரு கருத்துக்களை வெளிப்படுத்திருக்கிறார், நான் திமுகவின் பி டீம் என்று சொல்லி இருக்கிறார்.
கொடநாடு வழக்குக்கு நான் ஏன் இன்று வரையிலும் குரல் கொடுக்கவில்லை?. நான் சாதாரண பொறுப்பாளர். இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 3,4 கொலைகள் நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏன் திமுகவிற்கு குரல் கொடுக்கவில்லை என்பது தான் தொண்டர்களுடைய கருத்தாக இருக்கிறது. எனவே, என்னை பொறுத்தவரையிலும் நான் பி டீமிலே இல்லை, எடப்பாடி பழனிசாமி ஏ1இல் இருக்கிறார்.
இன்று வரையிலும் அவர் மீது திமுக என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது சட்டமன்றத்தில் உங்களுக்கு தெரியும். சட்டமன்ற வரலாற்றில் துணைத் தலைவராக ஓபிஎஸ் இருக்கும் போது அவரை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி கொடுத்தோம். அப்போது முதல்வர் எழுந்து இதற்கான கருத்துக்களை சட்டப்பேரவைத் தலைவர் விரைந்து எடுக்க வேண்டும் என்று சொன்னார். அடுத்த 10 நிமிடத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அதை அறிவித்தார் என்பதை நாடறியும். ஆகவே, ஏ1 ஆக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார், நான் பி டீமாக இல்லை” என்று கூறினார்.
Follow Us