சாதாரண புலியைவிட காயம்பட்ட புலி ஆபத்தானது. பட்டது எதையும் அத்தனை எளிதில் வெளியேற்றாமல். ஆழ்மௌனம் கொண்டவர்களைக் கூட அறிவது கடினம்.அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலம் தொட்டு 51 ஆண்டுகள் வரை அதில் செல்வாக்காக நீடித்த சீனியரான செங்கோட்டையனை முன் பின் யோசிக்காமல் அவரது பதவிகளைக் பறித்ததோடு, இலைப்புள்ளிகளே அதிர்கிற வகையில் அவரைக் கட்சியை விட்டே நீக்கிய எடப்பாடியின் கனத்த அடியால் காயம் பட்டுப்போன புலியாய் நிற்கிற செங்கோட்டையன் யானை போல் பழிவெறியைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்.
காத்திருந்து அவரைத் தங்கள் வசம் கொண்டு வந்த த.வெ.க. அவருக்கு கௌரவமான பதவியும் நான்கு மாவட்ட பொறுப்பாளருமாக்கி கட்சியின் சிகரத்தில் கொண்டு போய் வைத்தது அக்கட்சியின் முக்கிய நால்வர் அணி ஜெர்க் ஆனாலும், கட்சித் தலைவர் விஜய் தனக்கு கொடுத்த அங்கீகாரத்தாலும் மற்றவர்களைவிட தன்னை முதன்மை ஸ்தானத்தில் வைத்திருப்பதால் புழகாங்கிதப்பட்டுப் போயிருக்கிறார் செங்ஸ் என்கிறார்கள் த.வெ.க. புள்ளிகள். த.வெ.க.வில் இணைந்த அந்த ஒரு நாளில் மாநிலத்தில், இதர கட்சிகளின் அரசியல் புள்ளிகளின் கவனத்தை தன் பக்கம் திரும்பியதை ஆகப் பெரியதாக எடுத்துக் கொண்டிருக்கிறாராம். செங்ஸ்.
தற்போதைய அந்த கெத்தில் த.வெ.க.வைப் பலப்படுத்துகிற வகையில் எடப்பாடியால் காயம் பட்ட புலியாய் உள்ளுக்குள் சீறிக் கொண்டிருக்கிற செங்ஸ் அவரைப் பழிவாங்கும் வகையில் அ.தி.மு.க.வை உண்டு, இல்லை என்றாக்குகிற வேலையிலிறங்கியிருக்கிறார். தமிழகமெங்கிலும் அ.தி.மு.க.வில் எடப்பாடியின் மீதான அதிருப்தியிலிருக்கிற எக்ஸ் அமைச்சர்கள் நிர்வாகிகளை குறிவைத்து அவர்களை த.வெ.க.பக்கம் திருப்புகிற வேட்டைக்குக் கிளப்பியிருக்கிறார்.
இந்த வேட்டையை ஆரம்பித்த செங்ஸ் முதல் விக்கெட்டாக தூத்துக்குடி அ.தி.மு.க. அதிருப்திப் புள்ளிகளைக் குறிவைத்திருக்கிறார். அவர் குறிவைத்த விக்கெட்டுகள் விழுகிற நிலையிலிருப்பதாகவும் அ.தி.மு.க.லெவலில் பேசப்படுகிறது.
ஜெ.மரணத்திற்குப் பின்பு முதலமைச்சர் சிம்மாசனத்திலமர்ந்த எடப்பாடி, பல மாவட்டங்களில் நேராகப் போய்க் கொண்டிருந்த கட்டுக் கோப்புகளைச் சிதைத்தவர் தனக்கு வேண்டப்பட்டவர்களை பொறுப்பிலமர்த்தினார். அந்தத் திட்டத்தில் தூத்துக்குடி மா.செ.பொறுப்பிலிருந்த சி.த.செல்லப்பாண்டியனை நீக்கி அவரை டம்மி பொறுப்பிலமர்த்தியவர் அந்த மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டமாக்கி அதற்கு சண்முகநாதன், கடம்பூர்ராஜ் இருவரையும் மா.செ. பொறுப்பில் வைத்தார்.
முக்கிய நகரமான தூத்துக்குடி மா.செ.பொறுப்பிற்கு வந்த சண்முகநாதன், முந்தைய மா.செ.செல்லப்பாண்டியன் நியமித்த சீனியர்களான 40 பேர்களை நீக்கியவர், அதில் மாற்றுக்கட்சியிலிருந்து வந்த அனுபவமேயில்லாத தனக்கு தலையாட்டுபவர்களை அந்தப் பொறுப்புகளிலமர்த்தியதால், தூத்துக்குடி அ.தி.மு.க. மட்டத்தில் மா.செ. சண்முகநாதனின் மீது அதிருப்தி, கட்சியும் செயல்பாடின்றி முடங்கி, முக்கிய புள்ளிகளின் ஒதுங்கலால் அ.தி.மு.க. அங்கே உள்ளாட்சி உள்ளிட்ட முக்கிய தேர்தல்களில் தோற்றதோடு மாநகரில் கட்சியும் சரிவை நோக்கிப் பயணித்திருக்கிறது. இவைகளனைத்தையும் சுட்டிக்காட்டி, மா.செ. சண்முகநாதன் வசமுள்ள மா.செ.க்குட்பட்ட தொகுதிகளில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளைப் பிரித்து மத்தி மாவட்டமாக்கி அறியப்பட்டவரை மா.செ.பொறுப்பில் வைக்க வேண்டுமென்று எடப்பாடியிடம் விரிவான புகாரை, செல்லப்பாண்டியன் தலைமையில் சென்ற அ.தி.மு.க.வினர் கொடுத்து நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். தூத்துக்குடியின் அரசியல் க்ளைமேட்களைத் தெரிந்த எடப்பாடியும் மாவட்டத்தை பிரித்து செல்லப்பாண்டியனை மா.செ.வாக்குகிறேன் என்று உறுதி கொடுத்தவர் தன் ஆட்சிபோயும் ஐந்து வருடத்திற்கும் மேலாக சொன்னதை செய்யாமல் ஜாவ்வாய் இழுபறியில் வைத்ததால் உப்பு நகரின் ஒட்டு மொத்த கட்சியின் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 80 சதவிகிதம் பேர் எடப்பாடியின் மீதான கடுப்பு, அதிருப்தியால் கட்சி மட்டத்தில் ஒதுங்கியபடி நிற்கிறார்கள்.
எடப்பாடி அ.தி.மு.க.வின் கட்டமைப்பு இப்படி பிடிப்பற்ற நிலையிலிருப்பதை மிகத் தெளிவாக உணர்ந்து செங்கோட்டையன், கட்சியில் நங்கூரம் போன்றிருந்த தன்னை வெளியேற்றிப் பொதுவெளியில் பேசு பொருளாக்கி சேதாரப்படுத்திய எடப்படியை, தன் மீது ஏன் கை வைத்தோம் என்று இடி இறங்கிய நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற வேட்கையில் த.வெ.க.விற்கு புதிய என்ட்ரி கொடுத்த, தான், யார்? தனது செல்வாக்கு பலம் எப்படிப்பட்டது. தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று, இருந்த கட்சிக்கும் வந்த கட்சிக்கும் உணர்த்தும் வகையிலும் அ.தி.மு.க.விலுள்ள செல்வாக்குள்ள எக்ஸ்கள். மாஜி நிர்வாகிகள், அதிருப்தியாளர்களைத்திரட்டி த.வெ.க.வின் பலத்தை உயர்த்த களத்தில் அடித்து ஆட ஆரம்பித்திருக்கிறார்.
அந்தத் திட்டத்தில் தான் நவ-29 அன்று காலை தூத்துக்குடி அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சரான சி.த.செல்லப்பாண்டியனின் லைனில் வந்த செங்கோட்டையன் பேசியதும் ஆச்சர்யப்பட்ட செல்லப்பாண்டியன் பின் சகஜமாகி வழக்கப்படி பரஸ்பர விசாரிப்பிற்குப் பின் செல்லப்பாண்டியனிடம் பேசிய செங்கோட்டையன், ஆரம்பத்தில நீங்க தி.மு.க.வின் மா.செ. பொறுப்புலருந்தப்ப வந்த உங்கள நா கூட்டிச் சென்று அம்மாவிடம் அறிமுகம் செஞ்சு வைச்சேம். ஞபாகம் இருக்கும்னு நெனைக்கிறேம்ணே.
அம்மா உங்கள ஆறு தொகுதிக்கும் மா.செ.வா.பொறுப்பு கொடுத்து பின்பு அமைச்சர் பதவியும் குடுத்தாக. அ.தி.மு.க.வுல நீங்க செல்வாக்கான புள்ளியாக யிருந்தீக. கட்சி லெவல்ல அப்படி யிருந்த உங்கள பொறுப்பிலருந்து எடுத்த அவரு டம்மி பொறுப்ப குடுத்து உங்கள ஒரப்படுத்திட்டாரு. இனிமேலும் அங்க நீங்க நீடிச்சா போனது வராதுண்ணே. த.வெ.க.விற்கு வாங்க, உங்கள தூத்துக்குடி மா.செ.வாக்கி எம்.எல்.ஏ. ஆகும்படி வழிபண்ணி அமைச்சராகவும் ஆகலாம் அதுக்கு நா.பொறுப்பு தலைவர் விஜய்ட்டயே கூட்டிபோறேன். தூத்துக்குடி ஏரியாவுல, கட்சிக்காரங்க ரெண்டாயிரம் பேரோட வாங்க. விஜய் தலைமைல பொதுக்கூட்டம் ஏற்பாடு பண்ணி அதுல இணையலாம் நல்லா யோசிச்சுக்குங்க. இந்த விசயம் வெளிய தெரியாம கட்சிக்காரங்கள திரட்டுங்க. என்று செங்கோட்டையன் சொன்னதை மறுப்பு சொல்லாமல் கேட்டுக்கொண்டாராம் செல்லப்பாண்டியன்.
இந்த சம்பவத்திற்குப் பின்பு செல்லப்பாண்டியன் தன்னுடைய நெருங்கிய ஆதரவாளர்களிடம் இது பற்றி குசு குசுத்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
தூத்துக்குடி அ.தி.மு.க. அதிருப்தி புள்ளிகளைக் குறிவைத்து தந்திரமாக பகடையை உருட்டி வருகிறாராம் செங்ஸ்.அவரின் குறியான ஆட்டத்தில் தூத்துக்குடி அ.தி.மு.க.வின் முக்கிய விக்கெட்டுகள் மளமளவென சரியலாம் என்கிறார்கள் விவரப் புள்ளிகள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/05/a-2025-12-05-19-44-00.jpg)