அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (27.11.2025) காலை 10:00 மணியளவில் இணைத்துக் கொண்டார். சென்னையை அடுத்துள்ள பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டிலே பல்வேறு இடங்களிலே பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கிற நிலையில் என்னிடத்திலே சொல்லியிருக்கிறார். என்ன காரணம் என்றால் ஒரு மாற்றம் தமிழகத்தில் வேண்டும். தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்திலே இவர்கள் மட்டும்தான் ஆள வேண்டுமா?. ஏன் மற்றொருவர் புனித ஆட்சியை நடத்துவதற்கு ஒரு தூய்மையான ஆட்சியை நடத்துவதற்கு ஒருவர் தேவை என்ற எண்ணம் மக்கள் மனதிலே நிறைந்திருக்கிறது என்பதுதான் இந்த தமிழகம் வெற்றிக் கழகம் இன்றைக்குப் பயணத்தை மேற்கொள்கிற போது அது வெற்றி பயணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக இதை நான் சொல்வதற்குக் காரணம் எல்லா நாடுகளிலும் எல்லா மாநிலங்களும், பல்வேறு மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. டெல்லியை எடுத்துக் கொண்டாலும் கூட 2 கட்சிகள் தான் பெரிய கட்சி என்கிற போது அன்றைக்கு மாற்றங்கள் உருவாக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது. அதே நேரத்தில் பஞ்சாபிலே கூட காங்கிரஸ் உள்ளிட்ட 2 கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிற போது இடையிலே மற்றொரு கட்சி வருகின்ற வாய்ப்பு அங்கே உருவாக்கப்பட்டது. இதையெல்லாம் நான் எதற்காகச் சொல்கிறேன் என்று சொன்னால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/27/tvk-sengottaiyan-pm-1st-day-before-2025-11-27-15-44-23.jpg)
ஒரு தூய்மையான ஆட்சி தமிழகத்திலே கொண்டுவர வேண்டும். ஒரு மாற்றங்கள் தேவை என்ற நோக்கத்தோடு தான் இந்த பயணங்களை அவர் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த பயணம் என்பது மக்கள் இன்றைக்கு முழு மனதோடு வரவேற்று இருக்கிறார்கள். வரவேற்பு மட்டுமல்ல வெற்றியைச் சூடுவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார். அதற்கான நேரத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே 2026 என்பது மக்களால் வரவேற்கப்படுகிற மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற மக்களால் உருவாக்கப்படுகிற ஒரு புனித ஆட்சி தமிழகத்தில் உருவாவதற்கு நம்முடைய வெற்றி கழகத்தினுடைய தலைவர் அன்பிற்கினிய இளவல் விஜய் அவர்கள் வெற்றி பெறுவார்கள். 2026லே மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை அவர் எட்டுவார் என்பதை மட்டும் நான் இந்த நேரத்திலே உங்களுக்குப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.
Follow Us