அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி (27.11.2025) இணைத்துக் கொண்டார். இதனையடுத்து அக்கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். மேலும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எனவே இந்த பரப்புரைக்கு அனுமதி கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் செங்கோட்டையன் நேற்று (07.12.2025) மனு அளித்திருந்தார். அந்த மனுவில் ஈரோட்டில் உள்ள பவளத்தாம்பாளையம் அருகே விஜய் பரப்புரை செய்ய உள்ளதாக த.வெ.க.வினர் குறிப்பிட்டு அனுமதி கேட்டிருந்தனர். இதனையடுத்து ஈரோட்டில் விஜய்யின் பரப்புரை செய்ய அனுமதி கோரிய இடத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. 

Advertisment

அதாவது த.வெ.க.வினர் மனுவில் குறிப்பிட்டபடி, 75 ஆயிரம் பேரைக் கொண்டு பிரச்சாரம் நடத்துவதற்கான தகுந்த இடம் அது இல்லை என்பதால் அந்த இடத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில் த.வெ.க.விக்கு கிடைக்கும் சின்னத்தைப் பார்த்து நாடே அஞ்சப் போகிறது என செங்கோட்டையன் அக்கட்சியினர் மத்தியில் பேசியுள்ளார்.  கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “நமக்கு (த.வெ.க.விற்கு) சின்னம் கிடைக்கப் போகிறது என எனக்குத் தெரியும். ஆனால் அது பற்றி ஆணை வரும் வரையிலும் வெளியே சொல்லக்கூடாது. 

tvk-flag-std

அந்த சின்னத்தைப் பார்த்ததற்கு பிறகுதான் நாடே வியக்கப் போகிறது. நாடே அஞ்சப் போகிறது. ஏனென்று சொன்னால் இவரை வெல்வதற்கு இனி தமிழகத்திலே யாரும் இல்லை. நீங்கள் (அங்கிருந்த நிர்வாகிகளை நோக்கி) அஞ்சத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் வாக்கைச் செலுத்தச் சொல்லி வருவார்கள். அவர்களுக்கு வணக்கத்தைப் போடுங்கள். வாக்குகளை விஜய்க்குப் போடுங்கள்” எனத் தெரிவித்தார்.

Advertisment