அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (27.11.2025) காலை 10:00 மணியளவில் இணைத்துக் கொண்டார். சென்னையை அடுத்துள்ள பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்.ஜி.ஆரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன். 1972ல் அதிமுக இயக்கம் துவங்குகிற போது எம்.ஜி.ஆக்கு பின்னாலே அணிவகுத்து நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன். எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு 1975லே பொதுக்குழு கோவையிலே நடைபெறுகிற போது அதற்கு முழு பொறுப்பையும் அரங்கநாயகம், மணிமாறன் மற்றும் என்னிடத்திலே ஒப்படைத்தார். அந்த பணிகளை எம்.ஜி.ஆர் பாராட்டுகின்ற அளவிற்கு நாங்கள் முடித்து அவர் இருக்கின்ற சத்யா ஸ்டுடியோவிலே சந்திக்கின்ற போது அவர் என்னைக் கட்டிப்பிடித்துத் தழுவி ஒரு இளைஞராக இருக்கிற நீங்கள் இந்த பணிகளை ஆற்றி இருக்கிறீர் நான் பாராட்டுகிறேன் என்று பாராட்டினார்.
அப்போதெல்லாம் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் சொன்னார்கள் இந்த கட்சி 100 நாட்கள் கூட நடக்காது. 100 நாட்களிலே 100 நாள் படம் என்று சொல்வார்களே அதைப்போல மறைந்துவிடும் என்று சொன்னார். ஆனால் பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அண்ணா சொல்கிற போது இந்த இயக்கம் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறது. என்னை நீங்கள் காண வந்திருக்கிறீர்கள் நான் முதலமைச்சர் என்ற முறையில் என்று சொல்லி என்னை வெற்றி பெற வைத்தவர் குண்டடிபட்டுக் கிடக்கிறார். அவரை பார்த்துவிட்டு வாருங்கள் என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட பாராட்டுதல்களைப் பெற்றவர் எம்.ஜி.ஆர். அவர் தன்னுடைய காலத்திலிருந்து அவருடைய பணிகள் என்பது 3 முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக அரியணையிலேயே அமர்ந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/27/sengottaiyan-vanakkam-our-img-2025-11-27-14-46-55.jpg)
பத்தாயிரம் மைலுக்கு அப்பாலே சிகிச்சை பெறுகிற போது தமிழ்நாட்டிலே கால் வைக்கிற போது அவர்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றைப் படைத்தார். அந்த தலைவர் மறைந்ததற்குப் பிறகு இயக்கம் இரண்டு கூறுகளாகப் போகிற போதுதான் 1987இல் ஜெயலலிதா வழியிலே நான் பயணத்தை மேற்கொண்டேன். ஜெயலலிதாவும் அவருடைய சுற்றுப்பயணமாக இருந்தாலும் சரி பல்வேறு ஆலோசனைகள் கேட்கின்ற போது பல்வேறு நண்பர்களோடு நானும் இணைந்து அந்த பணிகளை நான் மேற்கொண்டிருக்கிறேன்.
ஜெயலலிதாவால் பாராட்டுதலைப் பெற்றிருக்கிறேன். இமயமே தன்னுடைய தலையிலே விழுகிறது என்றாலும் கூட சருக்காமல் வழுக்காமல் அந்த இயக்கத்திற்காகவும் எனக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் என்று ஒரு பெரிய கேசட் பற்றி உங்களுக்குத் தெரியும் என்னுடைய திருமணத்திலே மட்டுமல்ல திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட அந்த அளவுக்குப் பாராட்டினார். ஆனால் இன்றைக்கு இருக்கிற நிலைகள் வேறு. இன்றைக்கு நான் அதைச் சொல்வதற்குக் காரணம் ஜெயலலிதாவுக்குப் பிறகு ஆட்சி நடத்தினோம். நடத்தியதற்குப் பிறகு காலச்சூழ்நிலைகளில் பல்வேறு கூறுகளாக 3 கூறுகளாக அதிமுக பிரிந்தது. நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நாங்கள் எல்லோரும் அந்த கருத்துக்களை வலியுறுத்தினோம். ஆனால் அந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டதே தவிரச் செயல்படுத்த இயலவில்லை” எனப் பேசினார்.
Follow Us