முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் (30.10.2025) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தை தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் கூட்டாக பங்கேற்று முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதோடு மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதனால், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏவாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் பல முக்கிய பதவிகளில் வகித்து வந்த செங்கோட்டையனை, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்திள் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், “அதிமுக என்ன மாதிரியான குடும்ப கட்சியாக இருக்கிறது” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “உங்களுக்கு (ஊடகத்தினர்) நன்றாகவே தெரியுமே. நீங்களும் மீடியாவில் வெளியிட்டுக் கொண்டு தானே இருக்கிறீர்கள். என்ன நடக்கிறது என உங்களுக்குத் தெரியாதா?. நான் சொல்லத் தேவையில்லை. மகன் தலையிடுகிறார். உங்களுக்குத் தெரியும் அவருடைய மைத்துனர் டிவியில் எல்லாம் வந்து கொண்டு தான் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “உங்களைப் பின்னணியில் இருந்து பாஜக இயக்குகிறது என்பது மாதிரியான கருத்து கூறப்படுகிறது” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் கிட்டத்தட்ட 53 ஆண்டுகள் (அதிமுகவில்) இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னை யாரும் இயக்க முடியாது” எனப் பதிலளித்தார். மேலும், “நீங்கள் ஒரு மூத்த அரசியல்வாதி. எல்லோருக்கும் உங்களைத் தெரியும். உங்களை மட்டும் நீக்கியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அவரிடம் (எடப்பாடி பழனிசாமி) கேட்க வேண்டிய கேள்வி” எனப் பதிலளித்தார். அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். அதனை எப்படிப் பார்க்கிறீர்கள். அதற்கு, “அது அவருடைய விருப்பம்” எனப் பதிலளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/05/sengottaiyan-pm-2-2025-11-05-08-17-39.jpg)