Sengottaiyan says he will work for TVK as long as I have breath
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று (27.11.2025) காலை இணைந்தார். சென்னையை அடுத்துள்ள பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார்.
மேலும் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் முன்னாள் எம்.பி.யுமான சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய, கழக, பகுதி நிர்வாகிகள், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் வருகை தந்து த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அக்கட்சியின் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். மேலும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் இன்று செங்கோட்டையன் வந்த போது, அங்கு தவெக தொண்டர்கள் ஏராளமானோர் கூடி வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இன்றைக்கு மக்கள் சக்தியாக இருக்கிற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நாளைய தமிழக முதல்வருக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும், மக்கள் என்ற சக்தியின் மூலமாக அரியணை ஏறுவார். இங்கு இருக்கிற உணர்ச்சிப்பூர்வமான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நம்மோடு உறுதுணையாக இருந்தவர்கள் ஏராளத்தாள 4 மணி நேரம் காத்திருந்து, ஒரு சாதாரண தொண்டராக இருக்கிற என்னை வரவேற்க வந்திருக்கிறார்கள் என்றால் நான் எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் அதற்கு ஈடு இல்லை. வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. அது மக்கள் சக்தியாக மாறியிருக்கிறது. எனவே மக்கள் சக்தி மூலமாக, தமிழகத்தில் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு, ஒரு நேர்மையான ஆட்சி உருவாக்குவதற்கு விஜய் புறப்பட்டிருக்கிறார். அவருடைய பயணம், 2026இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் அமர்வார். மக்கள் சக்தியை வீழ்த்துவதற்கு எந்த சக்தியாலும் முடியாது.
வெற்றி என்ற அவருடைய பயணம் மேலும் மேலும் மக்களுக்கும் மக்களின் சேவைக்காக தொடரும். இன்றைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானத்தை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகாகவும், புனித ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த இயக்கத்தில் நான் இடம்பெற்றிருக்கிறேன். இவர்களோடு இணைந்து அந்த பணிகளை எனது உயர் மூச்சு உள்ளவரை பணியாற்றுவேன். எம்.ஜி.ஆர், அண்ணாயிஸம் தான் விஜய்யின் கொள்கை. எம்.ஜி.ஆர் வழியிலும் ஜெயலலிதா வழியிலும் புனித ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றது. இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிற இரண்டு ஆட்சியும் மாற்றப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். புதிய பயணத்தை மேற்கொண்டிருக்கின்ற அவருக்கு, மக்கள் சக்தியால் வெற்றி கிடைக்கும். இங்கு ஜனநாயகம் இருக்கிறது, அதனால் இங்கு எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்” என்று கூறினார்.
Follow Us