‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த சூழ்நிலையில், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் நடந்ததால், அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு நெறிமுறைகளை வகுப்பதற்காக தற்காலிகமாக அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
கரூர் துயரச் சம்பத்திற்கு பிறகு செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று (30-11-25) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதில் அவர், “இன்றைக்கு இந்த தொகுதியில் ஒருத்தர் எம்.எல்.ஏவாக இருந்தார். நீங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தப்பட்டவர். ஆனால் ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகுகிறார். ஆனால், ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டார்களா? அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதிமுக ஆட்சி மலர்ந்த உடனே இந்த தொகுதி எடப்பாடி தொகுதிக்கு மேல் வளரும். அத்திக்கடவு அவினாசி திட்டத்தால் விவசாயிகள் நடத்தி நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லாததால் அவர் வரவில்லை என்றார். இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்று கட்சியில் சேர்ந்தீர்கள்?
அந்த கட்சியில் இணைந்த பிறகு தூய்மையான ஆட்சி அமைப்போம் என்கிறார். அப்படி என்றால் அதிமுக ஆட்சியில் தூய்மையான ஆட்சி நடக்கவில்லையா? நான் ஆட்சி செய்த போது அவர் அமைச்சராக இருந்தார். அதிமுகவில் தொடர அவர் லாயக்கற்றவர் என்று முடிவு செய்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினோம். அவர் கிட்டத்தட்ட 2, 3 ஆண்டுகாலமாக இயக்கத்தில் இருந்துகொண்டே, திட்டமிட்டு இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டார், இயக்கத்திற்கு துரோகம் விளைவித்தார். இந்த இயக்கத்திற்கு யார் துரோகம் செய்தாலும் அவரை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்” என்று கூறினார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தூய்மையான ஆட்சி என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி செய்த காலம் தூய்மையான ஆட்சியாக இருந்திருக்கிறது. அதனால் அதை பின்பற்றினோம். ஆனால், அவருடைய ஆட்சியில் தூய்மையான ஆட்சியாக இல்லை. 2021இல் மக்களால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே அவருக்கு பதிலாக இருக்கும். அவருக்கு நான் காலக்கெடு விதிக்கவில்லை. அனைவரையும் ஒன்றிணைக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தான் கூறினேன். ஒரு கருத்தை சொல்வதற்கு சுதந்திரம் வேண்டும். நேற்று வந்த கூட்டத்தை பார்த்தால், எந்தெந்த மாவட்டத்தில் இருந்து வந்தார்கள்? எந்தெந்த பகுதியில் இருந்து வந்தார்கள் என்பது கோபிசெட்டிபாளையம் பகுதி மக்களுக்குத் தெரியும். பல்வேறு இடங்களில் வாகனங்கள், பேருந்துகள் மூலமாக தான் அங்கு வரவழைக்கப்பட்டிருக்கிறது. என்னை வெளியே அனுப்ப வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை. அதை ஏதோ ஒரு காரணம் கூறி செய்துவிட்டார்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, அமித்ஷாவின் ஆலோசனைப்படி தான் செங்கோட்டையன் மாற்று கட்சியில் இணைந்துவிட்டார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒரு முடிவு செய்து தான் அந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறேன். மற்றவர் கருத்துக்கள் சொல்லியோ, மற்றவர் கருத்துக்களை ஏற்றோ அந்த இயக்கத்தில் நான் இணையவில்லை” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/01/epssengo-2025-12-01-21-39-33.jpg)