அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இன்று (07.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி பெற வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும். மற்றும் கட்சியில் பல பேர் அமைதியாக இருக்கின்றவர்கள் இணைக்கப்பட வேண்டும்.அப்படி வருகிற போது தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவை மீண்டும் தமிழகத்திலே உருவாக்குவதற்கு ஏதுவாக இருக்கும் என்று கருத்துக்களை நான் வெளியிட்டேன். அதற்குப் பிறகு நான் கட்சி பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டேன்.
ஜெயலலிதா காலத்தில் 2009இல் இன்றைய பொதுச்செயலாளரையே (இ.பி.எஸ்.) கட்சியின் அனைத்து பணிகளிலும் இருந்து விலக்கினார்கள். அதைப்போல 2012லும் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கிற போது என்னையும் கட்சிப் பணியிலிருந்து விலக்கினார். ஆனால் அதற்கு பிறகு ஜெயலலிதா நம்மைச் சுற்றி இருக்கின்ற யாரையும் விலக்கவில்லை. அவர்களை அரவணைத்துச் சென்ற வரலாறுகள் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அந்த நிலை இல்லை. யார் நம்மிடத்திலே பேசினாலும் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கின்ற நிலை உள்ளது. இது இயக்கத்தைப் பலவீனப்படுத்துவது மட்டுமல்ல தன்னை சுற்றி இருக்கின்றவர்களைப் பலவீனப்படுத்துகிறபோது அது யார் செய்கிறார்களோ அவரும் பலவீனம் அடைகிறார்கள். இதுதான் வரலாறு.
கருணாகர் என்ற சட்டமன்ற உறுப்பினர் பல்லாவரத்தைச் சார்ந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். அவருடைய மருமகள் மூலம் அங்கே இருக்கின்ற பணியாளருக்கு ஏற்பட்ட நிலையை விளக்கி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அதற்குப் பிறகு என்ன சொன்னோம் என்று சொன்னால் இதற்கு சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தினோம். எதற்கெல்லாம் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிற போது கோடநாட்டிலே நடைபெற்ற கொலைகளைப் பற்றி இதுவரையிலும் குரல் கொடுக்கப்பட்டிருக்கிறதா?.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/eps-mic-1-2025-11-07-14-30-11.jpg)
எதற்கு எடுத்தாலும் சிபிஐ விசாரணை, எதற்கு எடுத்தாலும் சிபிஐ விசாரணை. ஆனால் நம்மை வாழ வைத்த அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஜெயலலிதாவின் அந்த கொடநாட்டில் ஏற்பட்டிருக்கிற கொலை கொள்ளைக்கு ஒரு நாளாவது சிபிஐ விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்பதை நான் தெரிந்து கொள்ளவிரும்புகிறேன். ஏனென்று சொன்னால் பி டீம் என்று என்னைப் பற்றிச் சொன்னார்கள். யார் பி டீமாக இருக்கிறார் என்பது இதன் மூலமாகப் புரிந்து கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல 3 முறை ஜெயலலிதா இருக்கின்ற போதும் ஜெயலலிதாவின் மறைவிற்கும் பிறகும் ஓ.பி.எஸ். மட்டும்தான் முதலமைச்சராக அருகிலே அமர்த்தினார்கள். ஏன் உங்களை அமர்த்தவில்லை?. முதலமைச்சராக என்ற கேள்வியை நான் இங்கே கேட்க விரும்புகிறேன்.
ஏனென்று சொன்னால் நான் முதலமைச்சர் ஆனதற்கு பிறகுதான் இவருக்கு அமைச்சரவையில் இடம் தந்தேன் என்று சொன்னார். எங்களைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்று சொன்னால் இவர் முதலமைச்சரே ஆகியிருக்க முடியாது. ஜெயலலிதா மூலமாக 3 முறை முதலமைச்சரானவர் ஓ.பி.எஸ். ஆனால் இவரைப் (இ.பி.எஸ்.) பொறுத்தவரைக்கும் கொல்லைப்புற வழியாக முதலமைச்சரானவர் என்பது நாடறிந்த ஒன்று. நான் எதற்காகச் சொல்கிறேன் என்று சொன்னால் இன்று என்னைக் கொச்சைப்படுத்துவதற்குத் தான். நான் தான் அவருக்கு அமைச்சரவையில் இடம் தந்தேன் என்று சொல்வது வேதனை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. கடந்த காலத்தை நான் சொல்ல விரும்பவில்லை. சொல்வதும் சரியாக இருக்காது” எனப் பேசினார்.
Follow Us