அண்மைக் காலமாகவே அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்காக விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததால் செங்கோட்டையன் தனது அதிருப்தியை முதன்முதலில் பொதுவெளியில் வெளிப்படுத்தினார். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டங்களை அவர் தவிர்த்தார், மேலும் எடப்பாடியின் தீவிர ஆதரவுத் தலைவர்களுடனான நெருக்கத்தைக் குறைத்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பாஜகவின் டெல்லி தலைமையின் தலையீட்டால் எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையேயான மோதல் சற்று மௌனமாகியது. இந்த சூழலில் இன்று செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசிய செங்கோட்டையன், “1977-ல் நான் கோபி செட்டிபாளையத்தில் போட்டியிட விரும்பியபோது, எம்.ஜி.ஆர்., ‘நீ சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நில்’ என்று கூறினார். ‘சத்தியமங்கலம் எனக்கு அறிமுகமில்லாத தொகுதி, அங்கு போட்டியிட்டால் எப்படி வெற்றி பெறுவேன்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘எனது பெயரை உச்சரி, நீ வெற்றி பெறுவாய்’ என்றார். அப்படிப்பட்ட உன்னதமான தலைவர்தான் எம்.ஜி.ஆர்.
எஸ்.சி.எஸ்., கோவை செழியன் போன்றவர்கள் வெளியே சென்றிருந்தபோது, தேர்தல் நேரங்களில் எம்.ஜி.ஆர். அவர்களது வீட்டிற்கே சென்று, ‘தமிழக மக்களின் நலன் கருதி நான் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஆதரவாக வாருங்கள்’ என்று அழைத்து வந்தார். பத்து ஆண்டுகள் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை வழங்கினார். அவரது மறைவுக்குப் பிறகு, நாங்கள் அனைவரும் ஜெயலலிதாவைத் தலைமை ஏற்க அழைத்தோம். ஆளுமையும் மக்கள் செல்வாக்கும் மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம். திராவிடர்களும் ஆன்மிகவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் தலைமைப் பண்பை ஜெயலலிதா பெற்றிருந்தார்.
2016-ல் ஜெயலலிதா மறைந்தார். அவருக்குப் பிறகு இந்த இயக்கம் உடையக் கூடாது என்பதற்காக, அனைவரும் ஒன்றிணைந்து சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஒருமனதாக நியமித்தோம். பின்னர், காலச்சக்கரம் சுழன்று மீண்டும் முதலமைச்சர் யார் என்ற நிலை வந்தபோது, சசிகலா தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை(எடப்பாடி பழனிசாமி) முன்மொழிந்தார்.
இந்த இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வந்தபோது, எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் நான் இயக்கப் பணிகளைச் செய்துள்ளேன் என்று ஜெயலலிதா பலமுறை கூறியிருக்கிறார். இயக்கமும் தமிழக மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, கட்சிக்குள் எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருந்தேன். எனக்கு இரண்டு வாய்ப்புகள் வந்தன. ஆனால், இயக்கம் உடையக் கூடாது என்பதற்காகவே எனது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு இயக்கம் உடையக் கூடாது.
அதிமுகவை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களின் நலன் மிகவும் முக்கியம். 2016-க்குப் பிறகு நாம் தொடர்ந்து சந்திக்கும் தேர்தல் களங்கள் எவ்வளவு சவாலாக இருக்கின்றன என்பதை நான் அறிவேன். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவிடம், ‘நீங்கள் கட்சியின் மூத்தவர்களை மதிப்பதில்லை’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘என்னை ஒரு காலத்தில் விமர்சித்தவர்கள் இப்போது என் அருகில் உள்ளனர். ஆனால், அனுபவமிக்கவர்களின் துணையோடு மட்டுமே இந்த இயக்கத்தை வழிநடத்த முடியும் என்பதை அறிந்து, விமர்சித்தவர்களையும் கூடவே வைத்திருக்கிறேன்’ என்றார்.
இவை அனைத்தையும் ஏன் நினைவுபடுத்துகிறேன் என்றால்? 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், அதன்பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகியவற்றைச் சந்திக்கும்போது, களத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. இன்றைய நிலையில், 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால், குறைந்தபட்சம் 30 இடங்களாவது வென்றிருக்கலாம்.
2024 தேர்தலுக்குப் பிறகு, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் உள்பட நாங்கள் 6 பேர் பொதுச்செயலாளரைச் சந்தித்து, ‘கட்சி தொய்வாக உள்ளது. தேர்தல் களத்தில் எவ்வளவு வியூகங்கள் வகுத்தாலும் வெற்றி பெற முடியவில்லை. கட்சி ஒன்றிணைக்கப்பட வேண்டும்; வெளியே சென்றவர்கள் இணைக்கப்பட வேண்டும். மக்கள் விரும்புவதைச் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினோம். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று வெளியே சென்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். இதுதான் நமது தலைவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடம்.
வெளியே சென்றவர்கள் எந்த வேண்டுகோளையும் வைக்கவில்லை. ‘உங்களுடன் பணியாற்றத் தயார்’ என்று கூறுகிறார்கள். தொண்டர்களின் நலன் கருதி, எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக, பல்வேறு கடிதங்கள் மற்றும் மேடைப் பேச்சுகள் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதை யார் எடுத்துச் சொல்வது என்ற நிலையில், இன்று நான் மனம் திறந்து பேசுகிறேன். எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படும் சகோதர பாசத்தை இந்த இயக்கம் நமக்குத் தந்திருக்கிறது. எனவே, வெளியே சென்றவர்களை கட்சிக்குள் இணைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நமது வெற்றி இலக்கை அடைய முடியும். இல்லையெனில், யாராலும் நாம் வெற்றி பெறுவோம் என்று கூற முடியாது. யார் யாரை இணைக்கலாம் என்பதை கட்சியின் பொதுச்செயலாளரே முடிவு செய்யலாம். கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும். விரைவாக முடிவெடுத்தால் மட்டுமே வெற்றி இலக்கை அடைய முடியும்.
விரைவாக முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், இந்த மனநிலையில் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து முன்னின்று அதற்கான பணிகளை மேற்கொள்வோம். கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் செயல்படவில்லை என்றால், அதிமுக ஆட்சி அமைவதற்கு ஏதுவாக இருக்காது. ஆகவே, ஆட்சி அமைவதற்கு விரைவாகச் செயல்பட வேண்டும். ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்புகின்றனர். நான் விடுக்கும் கோரிக்கையை ஏற்றால், பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒருங்கிணைத்து அதற்கான முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார்.
இதையடுத்து செங்கோட்டையனிடம் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள பிறரை சந்தித்தீர்களா? என்று கேள்விக்கு, அது சஸ்பென்ஸ் என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.