Sengottaiyan said They come from Delhi just by talking about the alliance
தவெக தலைவர் விஜய் தலைமையில் நேற்று முன்தினம் (25-01-26) சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
குறிப்பாக அதிமுக, பா.ஜ.கவிடம் சரண்டர் ஆகிவிட்டதாகவும், அதிமுக ஊழல் கட்சி என்றும், அறிஞர் அண்ணாவை அந்த கட்சி மறந்துவிட்டது என்றும் கூறியிருந்தார். இதற்கு எதிர்வனையாற்றிய அதிமுக, தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் தவெக - அதிமுக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (27-01-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பல்முனை தாக்குதல் என்பது ஒருவர் மாபெரும் வெற்றியை அடையப்போகிறார் என்பதற்கு தான் நடக்கிறது. அதிமுகவுடன் தவெக கூட்டணி இணையும் என்று நினைத்தார்கள். நாமகல்லில் நடந்த நிகழ்ச்சியில், கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என்று பேசியது எடப்பாடி பழனிசாமி தான், நாங்கள் அல்ல. இன்று நிலைமைகள் மாறுகிற போது ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், ஐடி விங்கும் திமுக மீது குற்றச்சாட்டுகளை தான் பேச வேண்டும். திமுகவுக்கு இவர்கள் பி டீமாக செயல்படுகிறார்கள் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. புதிதாக உருவாக்கப்பட்ட இயக்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை சொல்வது எதிர்க்கட்சியின் நடைமுறையில் இல்லாத ஒன்று. இது வேதனையளிக்கிறது” என்று கூறினார்.
இதையடுத்து தவெகவுடன் டிடிவி தினகரன் கூட்டணிக்கு வருவார் என்று சொல்லப்பட்ட நிலையில், அவர் என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார் இது ஏமாற்றமாக இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஏமாற்றம் இல்லை. ஒவ்வொருவருடைய நிலை அப்படி இருக்கிறது. நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு நிலை எடுப்பது போல் அவரும் ஒரு நாளைக்கு ஒரு நிலை எடுக்கிறார். எங்களோடு வர வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் சூழ்நிலைகள் அவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கிறது என்பது என்னால் சொல்ல இயலாது. எங்கு சென்றாலும் வாழ்க. ஒவ்வொருவரிடம் கூட்டணி பற்றி பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள். பிரச்சனை எங்களுக்கு தானே தெரியும். நான் சொல்லாமல் இருக்கும் வரையில் நல்லது” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து தவெகவுடன் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக வெளிவரும் செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நல்லது நடக்கட்டும்” என்று கூறினார்.
Follow Us