அண்மைக் காலமாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று பிரிந்தவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது கோரிக்கையை பழனிசாமி ஏற்றால், அவரது பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைத்து முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

Advertisment

இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கலில் எடப்பாடி கே. பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டார். செங்கோட்டையன் பத்து நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “எட்டு மாதங்களுக்கு முன்பு பொதுச்செயலாளரைச் சந்தித்து, பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று நான உட்பட ஆறு பேர் கோரிக்கை வைத்தோம். இது குறித்து ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஜனநாயக அடிப்படையில், கட்சி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என் மீதான நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும். எனது ஒருங்கிணைப்பு பணி தொடரும். ‘காலில் விழுகிறோம், இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று காஞ்சிபுரத்தில் சிலர் கூறியிருந்தனர். ஆனால், அந்தக் கோரிக்கையை புறக்கணித்துள்ளனர்,” என்றார்.