அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த 21-ஆம் தேதி திடீரென சென்னைக்கு கிளம்பிச் சென்றார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தொடர்பாக அவர் முதலில் டி.டி.வி. தினகரனைச் சந்தித்து பேசியதாக தகவல் பரவியது. அதற்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்தார். "சென்னையில் நான் யாரையும் சந்திக்கவில்லை," என்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் செங்கோட்டையன், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து இரண்டு மணி நேரமாகப் பேசியதாக தகவல் பரவியது. இது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று கோபியில் செங்கோட்டையன் மீண்டும் நிருபர்களைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"நேற்று முன்தினம் நான் பல்வேறு விளக்கம் அளித்த பிறகும், சிலர் வதந்திகளை வேண்டுமென்றே பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டேன். என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்று வருவதைப் பார்ப்பதற்காகவும், சொந்த வேலைக்காகவும் சென்னை சென்று, மீண்டும் கோபிக்கு வந்துவிட்டேன். இன்று, தொகுதி மக்களின் துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். இது வேதனை அளிக்கக் கூடிய ஒன்று. என்னுடைய நோக்கம், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.
இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் கனவு நிறைவேற்றப்பட வேண்டும். கோடிக்கணக்கான தொண்டர்களின் தியாகங்கள் வெற்றி சூட வேண்டும் என்பதற்காகவே, கடந்த 5-ஆம் தேதி ஒருங்கிணைக்க வேண்டும் எனச் சொன்னேன். அதன் பின்னர், எந்தக் கருத்தையும் வெளிப்படையாக யாரிடமும் சொல்லவில்லை. அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்பதை, நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தித் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வதந்தியை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள். அது எனக்கு வேதனை அளிக்கிறது. வேண்டுமென்றே பன்னீர்செல்வத்தைச் சந்தித்ததாக வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு, நான் பதில் சொல்ல இயலாது. ஏனென்றால், அது போன்ற நிகழ்வு நடக்கவில்லை எனத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற செய்திகள் வந்தபோது, நேற்றும் மறுநாளும் விளக்கமாகப் பதில் அளித்துவிட்டேன்.
இருந்தபோதிலும், தொடர்ந்து நேற்று மாலையில் சிலர் சந்தித்ததாகக் குறிப்பிட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, இன்று வரை குறிப்பிடப்படும் யாரையும் நான் சந்திக்கவில்லை என்பதை, இந்த நேரத்தில் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி, எனக்கு ஒரு அவப்பெயரை வரவேண்டும் என்ற நோக்கத்தோடு, திட்டமிட்டு செய்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. என்னுடைய நோக்கம், எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவு மலர வேண்டும். கோடிக்கணக்கான தொண்டர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்பதுதான் முழுமையான நோக்கம். அந்த நோக்கத்திற்கு, சிலர் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது உண்மையில் வேதனை அளிக்கிறது. நல்ல செயல்பாடுகளுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தர வேண்டும்.
இனியாவது, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வதந்திகள் பரப்புவது யார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. யார் பரப்புகிறார்களோ, அவர்களே நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை எச்சரிக்கையாகச் சொல்லவில்லை. அன்போடு சொல்கிறேன். 45 ஆண்டுகளுக்கு மேலாக, தூய்மையாகவும் விசுவாசமாகவும் பணியாற்றி இருக்கிறேன். மக்கள் பணியும் சிறந்த முறையில் செய்திருக்கிறேன். இந்தத் தொகுதி மக்கள் எனக்கு அளித்த வாக்குகள், மாபெரும் வெற்றியை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அதனால், மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அவர்களின் கனவை நிறைவேற்றித் தர, அவர்களுடன் துணை நிற்கிறேன். மக்கள்தான் உயிர் மூச்சு, தொண்டர்கள்தான் உயிர் மூச்சு, கழகம்தான் என் உயிர் மூச்சு." இவ்வாறு அவர் கூறினார்.