Sengottaiyan questioned What did Thirumavalavan do when he was in the BJP alliance?
தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (29-12-25) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு விஜய்யின் தலைமையை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். 1972இல் எம்.ஜி.ஆரை பார்த்தது போல், 1988இல் ஜெயலலிதாவை பார்த்தது போல் பல்வேறு நிகழ்ச்சிக்கு நான் செல்கிற போது ஏராளமான கூட்டம் வருகின்றனர். இந்த மாற்றம் வரலாற்றில் அவர் தமிழ்நாட்டின் முதல்வராக அமர்வார் என்பதை காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியினுடைய நிர்வாகிகள் பலரும், தவெகவுடன் இணைய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவரையிலும் அந்த கருத்துக்கள் என்னைப் போன்றவர்களிடம் கொண்டு வரப்படவில்லை. எங்களை பொறுத்தவரையிலும் தெளிவாக இருக்கிறோம். விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும் தான் கூட்டணியில் இணைய முடியும்” என்று கூறினார்.
இதையடுத்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பற்றி தவெக விமர்சனம் வைக்காமல் அமைதி காக்குகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “திமுக, வாஜ்பாயின் அமைச்சரவையில் இருந்த போது அவர் என்ன செய்தார் என்பதை திருமாவளவன் தான் விளக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரையிலும் தெளிவாக இருக்கிறோம். கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பதை தெளிவாக இருக்கிறோம். யார் யார் தவெகக்கு வருவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனவரி முதல் வாரத்திற்குள் அத்தனையும் தெரியும்” என்று கூறினார்.
Follow Us