தவெக தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு கடந்த 18ஆம் தேதி ஈரோட்டில் தனது பரப்புரையை மேற்கொண்டார். இதில் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் ரசிகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.
இதையடுத்து அவர் அடுத்த சந்திப்பு எங்கே என்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடக்கவுள்ளதாக கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “விஜயை பார்ப்பதற்காக ஏறத்தாழ 3 லட்சம் பேர் அங்கு கூடினார்கள். இது ஒரு வரலாறு படைக்கக்கூடிய கூட்டமாக அமைந்திருக்கிறது. இன்று மாலை விஜய்யோடு கலந்து பேச இருக்கிறோம். அதற்குப் பிறகு எந்த மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும்.
அவரது அறிவுரையை கேட்ட பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டணியை பொறுத்தவரை எல்லா முடிவும் விஜய் தான் மேற்கொள்வார். பொங்கலுக்கு பிறகு தமிழ்நாட்டில் என்ன மாற்றம் நடக்கப்போகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள்” என்றார்.
Follow Us