தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன்  ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் தொடக்க விழாவை அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார். இந்நிலையில் அதிமுக தலைமை மீதும், எடப்பாடி பழனிச்சாமி மீதும் செங்கோட்டையனுக்கு மீண்டும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனது ஆதரவாளர்களுடன் செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் கடந்த 6 மாதங்களுக்கு மேல் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஈரோடு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்  செய்வது தவிர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மற்றொரு புறம் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில், “அதிமுக ஒரு அணியில் இணைய வேண்டும் என்று சசிகலா கூறிய கருத்தை வரவேற்கிறேன். கூட்டணி தொடர்பாக தவெகவினர் யாரும் பேசவில்லை. ஆனால் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் டிசம்பர் மாதம் அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.