முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தை தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் பங்கேற்று கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முத்துராமலிங்க தேவருக்கு கூட்டாக  மரியாதை செலுத்தியது மட்டுமல்லாமல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Advertisment

ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் பனிப்போர் நிலவி வந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரைச் சந்தித்து பேசியது அதிமுகவில் மேலும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இதனிடையே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை பொறுத்தவரைக்கும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்தார். இது ஒருபுறமிருக்க நேற்று பசும்பொன்னில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம், கட்சியில் இருந்து நீக்கினால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், “கட்சியில் இருந்து நீக்கினால் சந்தோஷப்படுவேன்” என்று கூறினார்.

Advertisment

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் செங்கோட்டையன் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிக்குப் பிறகு, கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனின் அதிகாரம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. ஏற்கெனவே,ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கிய நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கட்சியில் நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நாளை காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்தில் விரிவாக பேசுகிறேன். நீக்கப்பட்டது மட்டுமல்லாமல் மொத்த விளக்கத்தை நாளை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisment