அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தைத் தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கூட்டாக  பங்கேற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதோடு மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதனால், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனைக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

Advertisment

எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏவாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளில் வகித்து வந்த செங்கோட்டையனை, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. அதனை தொடர்ந்து செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அதே போல், செங்கோட்டையன் திமுகவின் பி-டீம் என்று எடப்பாடி பழனிசாமியும் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார்.

Advertisment

இந்த சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவுள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர், செங்கோட்டையனிடன் கட்சியில் இணைவது குறித்து சந்தித்துப் பேசியதாகவும், அதையடுத்து செங்கோட்டையன் நாளை (27-11-25) தவெகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை இன்று அதிரடியாக ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து இன்று செங்கோட்டையன் வழங்கினார். இதனிடையே, செங்கோட்டையனை தங்களது கட்சியில் இணைக்க திமுக தீவிர முன்னெடுப்பு எடுத்து வந்தது.

இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் உள்ளனர். தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யை செங்கோட்டையன் நேரில் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், அவர் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்த மூத்த தலைவரான செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுவது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. 

Advertisment