அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 5 ஆம் தேதி (05.09.2025) செய்தியாளர்கள் மத்தியில் மனந்திறந்து பேசுகையில், “அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் அதற்கு 10 நாட்கள் கெடு விதிக்கிறேன். இல்லையெனில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 3 தரப்பினரையும் அதிமுகவில் ஒன்றிணைப்பதற்கு உண்டான முயற்சியை எடுப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

இது அதிமுகவில் புதிய புயலை வீசி இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும் செங்கோட்டையன் சந்திப்பு மேற்கொண்டிருந்தார். மற்றொருபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய டிடிவி தினகரனை பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் டிடிவி தினகரனைச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (24.09.2025) மதியம் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது இருவரும் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் இல்லத்திலேயே செங்கோட்டையனுக்கு மதிய விருந்தும் அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

இந்த விருந்து முடித்த பிறகு செங்கோட்டையன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. முன்னதாக ஓ. பன்னீர் செல்வத்திடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “டிடிவி தினகரன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் விரும்பினால் அவர்களையும் சந்திப்பேன்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.