அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாக செங்கோட்டையன் கடந்த 5ஆம் தேதி (05.09.2025) செய்தியாளர்கள் மத்தியில் மனந்திறந்து பேசுகையில், “அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் அதற்கு 10 நாட்கள் கெடு விதிக்கிறேன்.
இல்லையெனில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 3 தரப்பினரையும் அதிமுகவில் ஒன்றிணைப்பதற்கு உண்டான முயற்சியை எடுப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் புதிய புயலை வீசி இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும் செங்கோட்டையன் சந்திப்பு மேற்கொண்டிருந்தார்.
மற்றொருபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய டிடிவி தினகரனை பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணி தொடர்பாக ஓ. பன்னீர்செல்வத்தை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் நேற்று (24.09.2025) மதியம் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.