அண்மைக் காலமாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று பிரிந்தவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது கோரிக்கையை பழனிசாமி ஏற்றால், அவரது பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கலில் எடப்பாடி கே. பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார். செங்கோட்டையன் பத்து நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் பேசுகையில், ''அதிமுக கட்சி தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் இருக்கிறார்கள். இதுவே பலருக்கு தெரியவில்லை. அதிமுகவில் எல்லா தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் பக்கம் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை களப்பணியை பார்த்தே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்''என்றார்.
அப்பொழுது செங்கோட்டையன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ''பத்து நாள் கெடு கொடுத்த செங்கோட்டையன் தற்போது கட்சியிலேயே இல்லை'' என பொன்னையன் உளறினார். செய்தியாளர்கள் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி விட்டார்களா? என்ற கேள்விக்கு ''செங்கோட்டையன் இப்பொழுது கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பேசி சமாளித்தார். ''செங்கோட்டையனை பற்றி எந்த கேள்வியும் கேட்காதீர்கள். செங்கோட்டையன், அதிமுக கூட்டணி உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரப்பூர்வமான விஷயங்களை எடப்பாடி பழனிசாமி தான் பேசுவார். எனவே செங்கோட்டையன் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது'' என்றார்.