'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 155 க்கு மேற்பட்ட தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது. அதேநேரம் டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தது அதிமுகவில் பேசு பொருளாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவுடன் சந்திப்பு மேற்கொண்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் சேலத்தில் இருந்து நீலகிரிக்கு சுற்றுப்பயணத்திற்காக சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர். ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உற்சாகமாகத் திரண்டு, காரில் வந்த எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.