Advertisment

பசும்பொன்னில் நடந்த அரசியல் சந்திப்பு; செங்கோட்டையன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ்!

sengottaiyan

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் 10 நாட்களுக்குள் இதை செய்யவில்லை என்றால் ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும்  முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பேசி தமிழக அரசியலில் புயலை கிளப்பினார்.

Advertisment

அண்மைக் காலமாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கு பனிப்போர் நிலவி வந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கெடு விதித்திருந்தது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான சூழலில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

இந்த சூழ்நிலையில், நேற்று நடந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமும பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியவர்களோடு செங்கோட்டையன் ஒன்றாக பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதுமட்டுமல்லாமல், பசும்பொன்னுக்கு வந்த சசிகலாவை, ஓ.பன்னீர்செல்வத்தோடு செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது அதிமுக மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உத்தரவில், “அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், எம்.எல்.ஏ இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று பசும்பொன்னில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம், கட்சியில் இருந்து நீக்கினால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், “கட்சியில் இருந்து நீக்கினால் சந்தோஷப்படுவேன்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

admk K. A. Sengottaiyan sengottaiyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe