Advertisment

“10 நாட்களுக்குள் பிரிந்து சென்றவர்களைச் சேர்க்க வேண்டும்; இல்லையெனில்..” - பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு

Untitled-1

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தீவிரமாகத் தயாராகி வருகின்றன. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் (விசிக), மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) ஆகிய கட்சிகள் மீண்டும் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம், எதிர்க்கட்சியான அதிமுக, பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

Advertisment

இந்நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் மூலம் அக்கட்சிக்குள் தற்போது கலகம் வெடித்துள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்காக விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததால் செங்கோட்டையன் தனது அதிருப்தியை முதன்முதலில் பொதுவெளியில் வெளிப்படுத்தினார். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டங்களை அவர் தவிர்த்தார், மேலும் எடப்பாடியின் தீவிர ஆதரவுத் தலைவர்களுடனான நெருக்கத்தைக் குறைத்துக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, பாஜகவின் டெல்லி தலைமையின் தலையீட்டால் எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையேயான மோதல் சற்று மௌனமாகியது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி கோபி அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன், இன்று (செப்டம்பர் 5) கோபியில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மனம் திறந்து பேச உள்ளதாகக் கூறினார். இதையொட்டி, மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு முன்பு எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள்தொண்டர்கள் அதிகளவில் குவிந்துள்ளர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை நாம் அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று வெளியே சென்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் சென்று, இதுகுறித்து முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமானவரிடம் வலியுறுத்தினோம். ஆனால், பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கவில்லை.

Advertisment

வெளியே சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வருவதற்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ‘எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று மட்டுமே அவர்கள் கூறுகிறார்கள். யார் யாரை இணைக்கலாம் என்பதை கட்சியின் பொதுச்செயலாளரே முடிவு செய்யலாம். கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும்.

விரைவாக முடிவெடுத்தால் மட்டுமே வெற்றி இலக்கை அடைய முடியும். ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்புகின்றனர். நான் விடுக்கும் கோரிக்கையை ஏற்றால், பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒன்றிணைத்து அதற்கான முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார்.

O Panneerselvam K. A. Sengottaiyan admk edappadi k palaniswami
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe